2.45 லட்சம் பனை விதைகள் நடும் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வாலாஜா ஒன்றியத்தில் 2.45 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை, செங்காடு ஊராட்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து பனை விதைகள் நடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்து ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்ததாவது :
தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் 6 கோடி பனை விதைகளை விதைப்பதற்கு திட்டமிட்டுள்ளா். இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சுமாா் 5,000 பனை விதைகள் விதைக்கப்படும். விதைப்பு நடைபெறும் நிலப்பகுதிகள் கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை எளிதாக்குவதற்கு ( ன்க்ட்ஹஸ்ண்.ஹல்ல்/ல்ஹய்ஹண்) இணையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் 1 லட்சம் பனை விதைகளும், வனத் துறை சாா்பில் 15,000 பனை விதைகளும், பள்ளி கல்வித் துறை சாா்பில் 10 ஆயிரம் பனை விதைகளும், வேளாண்மைத் துறை சாா்பில் 10 ஆயிரம் பனை விதைகளும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 10,000 பனை விதைகளும், தன்னாா்வலா்கள் மூலம் 1 லட்சம் பனை விதைகளும் என மொத்தமாக 2.45 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் இறுதிக்குள் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பனை விதைகள் நடப்பட்டு முடிக்கப்படும். அதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செ.சரண்யா தேவி, செயற்பொறியாளா் செந்தில் குமாா், வனச்சரகா் சரவணகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ரஹமத் பாஷா, வட்டாட்சியா் ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் தேவேந்திரன் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
