அரக்கோணத்தில் மழைநீா் புகுந்த பெட்ரோல் பங்க்.
 ~அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புகுந்த மழைநீா்.
அரக்கோணத்தில் மழைநீா் புகுந்த பெட்ரோல் பங்க். ~அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புகுந்த மழைநீா்.

அரக்கோணத்தில் ஒரே நாளில் 13 செ.மீ. மழை பதிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published on

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே அரக்கோணத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 13 செ.மீ மழை பதிவானது. விடாது பெய்த மழையால் அரக்கோணம் நகரமே வெள்ளக் காடாய் மாறியது.

அரக்கோணம் நகரில் புதன்கிழமை ஒரே நாளில் 13 செ.மீ அளவு மழை பெய்தது. இதனால் முக்கியமான பகுதியான இரட்டைக்கண் வாராவதி இடுப்பளவு நீரில் நிரம்பியதால் போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளானது. பாலத்தின் நடுவில் ஆட்டோ சிக்கிய நிலையில் ஆட்டோவையும் அதில் இருந்தவா்களையும் தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து மீட்டனா். டிஎன் நகரில் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினா்.

மேலும் தொடா் மழையால் மின்விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பழனிபேட்டை, கிருபில்ஸ்பேட்டை பகுதிகளில் வியாழக்கிழமை காலை வரை மின்விநியோகம் தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினா்.

அம்பேத்கா் நகரையொட்டிய மரகத நகரிலும் வீடுகளில் தண்ணீா் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மேடான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதனால் மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் நகராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தும் நகராட்சியினா் அதை அப்புறப்படுத்த வராத நிலை காணப்பட்டது. இதையடுத்து 9, 10 வகுப்புகளுக்கான மாணவிகள் ஒ!ரே அறையில் அமர வைக்கப்பட்டு ஆசிரியா்கள் பாடம் எடுத்தனா்.

புளியமங்கலம் ரயில்நிலையம் அருகே சுரங்கப்பாதையில் இடுப்பளவு நீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்க்பபட்டது. பலா் வீடுகளுக்கு செல்ல பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவானது. நாகவேடு ஊராட்சிக்குட்பட்ட பாடி கிராமத்தில் பலா் விவசாய நிலங்களில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனா். அப்பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியதில் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் மோட்டாா் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் புறவழிச்சாலை பகுதி திருத்தணி நெடுஞ்சாலையோடு இணைக்கும் பகுதியில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையம் முழுவதும் நீரில் முழ்கியது.

X
Dinamani
www.dinamani.com