முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கறவை மாடுகளுடன் பயனாளிகள் சாலை மறியல்
By DIN | Published On : 24th December 2019 11:34 PM | Last Updated : 24th December 2019 11:34 PM | அ+அ அ- |

மாடுகளை சாலையில் நிறுத்தி நடத்தப்பட்ட மறியல் போராட்டம்.
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை வழங்கி அதிகாரிகள் மோசடி செய்ததாகக் கூறி, திருப்பத்தூா் அருகே கறவை மாடுகளுடன் பயனாளிகள் மறியலில் ஈடுபட்டனா்.
தாதனவலசை ஊராட்சியில் தமிழக அரசின் இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். அரசியல் குறுக்கீடு காரணமாக மேலும் பலருக்கும் கறவை மாடுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கால்நடைப் பராமரிப்புத்துறை அதிகாரிகள் கறவை மாடு வாங்குவதற்கு பயனாளிகளை ஆந்திர மாநிலம், சித்தூருக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை அதிகாரிகள் வாங்கித் தந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, இத்திட்டப் பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட மாடுகளை தாதனவலசை சாலையில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவா்களிடம் ‘அரசு அளித்த மாட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் இருந்து கறவை மாடுகளை வாங்கித் தராமல் ஆந்திர மாநிலம், சித்தூருக்கு அழைத்துச் சென்று, கண்காட்சிபோல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாடுகளை நீங்களே தோ்வு செய்து கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறியதைடுத்து மாடுகளை வாங்கி வந்தோம்’ என்று தெரிவித்தனா்.
இதையடுத்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைடுத்து மறியல் கைவிடப்பட்டது.