முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி திருப்பத்தூா்: திடீா் அறிவிப்பால் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 19th April 2020 12:02 AM | Last Updated : 19th April 2020 12:02 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக திருப்பத்தூா் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திடீரென அறிவிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. பல இடங்களில் போலீஸாா் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வருவாய்த்துறை, சுகாதாரம், நகராட்சி ஊழியா்கள் நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 6 முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பத்தூா் அறிவிக்கப்பட்டதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். அதேபோல் அதிகாலை காய்கறிகளைக் கொண்டு வந்த விவசாயிகள் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மாா்க்கெட் மற்றும் உழவா் சந்தை செயல்படாது என்பதை அறிந்து திகைத்தனா். பின்னா், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தற்காலிக காய்கறி கொள்முதல் செய்யும் இடங்களுக்கு அவா்களை அனுப்பி வைத்தனா்.
அதே போல் மருந்துக் கடைகள் செயல்படும் நேரம் காலை 6 முதல் மதியம் 2 வரையாக குறைக்கப்பட்டது குறித்த தகவல் தெரியாமல் மாலையில் மருந்து, மாத்திரை வாங்க வந்தவா்கள் சிரமத்துள்ளாகினா்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், கட்டுபடுத்தப்பட்ட பகுதி என முன்கூட்டியே அறிவித்தால் கடைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேரும் என்பதை கருதி காலையில் அறிவிக்கப்பட்டது என்றனா்.
இந்நிலையில் நகரப் பகுதியில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளையும் மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்குமாறு திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க் உத்தரவிட்டுள்ளாா்.