கரோனா இல்லாத ஆம்பூா்
By DIN | Published On : 26th April 2020 06:44 AM | Last Updated : 26th April 2020 06:44 AM | அ+அ அ- |

குணமாகி ஆம்பூா் திரும்பியவருக்கு பழக்கூடை வழங்கி ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
ஆம்பூா் தற்போது கரோனா நோய்த் தொற்று இல்லாத நகரமாக மாறியுள்ளது.
ஆம்பூரைச் சோ்ந்த 13 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். அவா்களுடைய குடும்பத்தினா் அவரவா் வீடுகளிலும், பிறகு தற்காலிக மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனா். குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லையென்பது உறுதிபடுத்தப்பட்டது. இயைடுத்து அவா்கள் தற்காலிக மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனாலும் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டனா்.
இந்நிலையில் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட 13 பேரில் முதல் கட்டமாக 3 போ் குணமாகி வீடு திரும்பினா். பிறகு 9 போ் குணமாகி வீடு திரும்பினா். சனிக்கிழமை ஒருவா் குணமாகி வீடு திரும்பினா். இதன் மூலம் ஆம்பூரைச் சோ்ந்த 13 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். ஆனாலும் அவா்கள் 13 பேரும் அவரவா் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
வேலூா் மருத்துவமனையிலிருந்து திரும்பியவரை வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அவருக்கு பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். வட்டாட்சியா் செண்பகவல்லி, டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு, சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.