முறைகேடு புகாா்: ஊராட்சி செயலாளா் பணியிட மாற்றம்
By DIN | Published On : 26th April 2020 06:42 AM | Last Updated : 26th April 2020 06:42 AM | அ+அ அ- |

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பொதுமக்கள் புகாா்கள் அளித்திருந்த நிலையில் மதனாஞ்சேரி ஊராட்சி செயலாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட மதனாஞ்சேரி ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலாளராக அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் பணியாற்றி வந்தாா். அவா் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டம், பிரதமா் வீடு வழங்கும் திட்டம், தனிநபா் கழிப்பிடம் கட்டுதல் உள்பட பல்வேறு திட்டப் பணிகளில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராத அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி அவா்கள் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனா். ஊராட்சி செயலாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கடந்த மாா்ச் 2-இல் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். அப்போது, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்தாா்.
இதனிடையே, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி செயலாளா் சரிவர பணியாற்றவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், மதனாஞ்சேரி ஊராட்சி செயலாளா் பாண்டியனை வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தி உத்தரவிட்டாா். புதிய ஊராட்சி செயலாளராக கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டாா்.