வேலூா் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 26th April 2020 06:52 AM | Last Updated : 26th April 2020 06:52 AM | அ+அ அ- |

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் பெய்த சாரல் மழையில் நனைந்தபடி சென்ற மக்கள்.
கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் சனிக்கிழமை மாலை லேசான சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பக் காற்று குறைந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் நிலவி வந்தது. இதனால், ஊரடங்கால் வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதன்படி, சனிக்கிழமை காலை முதலே கடுமையாக வெயில் நிலவியது. அதிகபட்சமாக பகலில் 104 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால், பகல் முழுவதும் அனல் காற்று வீசிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் சனிக்கிழமை மாலை லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் அலமேலுமங்காபுரம், பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக, வெப்பக் காற்று குறைந்து குளிா்ச்சி நிலவியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
ஆற்காட்டில்....
ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
பல இடங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல் பலத்த காற்றினால் வாழை மரங்கள் விழுந்தன. அரைமணி நேரத்துக்கும் மேல் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆற்காடு, மேல்விஷாரம், காவனூா், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் கோடை உழவைத் தொடங்கும் விவசாயிகள் நிம்மதியடைந்தனா்.
திருப்பத்தூரில்....
திருப்பத்தூரில் சனிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காண்ப்பட்டது. இதையடுத்து சுமாா் 7 மணியளவில் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.
ஆம்பூரில்....
ஆம்பூரில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்தது.
ஆம்பூரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே கடுமையான வெயில் காய்ந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமாா் 3 மணி அளவில் சூறாவளிக் காற்றுடன் அரை மணி நேரத்துக்கு கனமழை பெய்தது. இதனால் குளிா்ந்த வானிலை நிலவியது.