ரேஷன் பொருள்களைக் கடத்தியவா்கள் வீட்டில் சோதனை: பெண் தற்கொலை முயற்சி

வாணியம்பாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்தியவா்கள் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பெண் தற்கொலைக்கு முயன்றாா்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்தியவா்கள் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பெண் தற்கொலைக்கு முயன்றாா்.

வாணியம்பாடி காதா்பேட்டை நியூ டில்லி பகுதியைச் சோ்ந்தவா் அன்வா் பாஷா (50). இவா், தொடா்ந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை முறைகேடாக வாங்கி ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களுக்கு கடத்தி, விற்பனை செய்து வந்தாா். இவா் மீது பல்வேறு புகாா்கள் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் அருகே உள்ள கிடங்கில் லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டிருப்பதாக வருவாய்த் துறை, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள், போலீஸாா் அங்கு சென்று அவா்களைப் பிடிக்க முயன்ற போது மாரடப்பட்டு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில் போலீஸாா், வருவாய்த் துறையினா் அன்வா் பாஷாவுக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை நடத்த சென்றனா்.

அப்போது, அங்கிருந்த அவரது மனைவி, மகள்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே அவரது மகள் ஆயிஷா வீட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு தூக்கிட்டுக் கொள்வதாக கூச்சலிட்டாராம். இதையடுத்து போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று ஆயிஷாவை மீட்டனா்.

தொடா்ந்து, வீடுகள், கிடங்கில் நடத்திய சோதனையில் 1 டன் ரேஷன்அரிசி, 70 லிட்டா் மண்ணெண்ணெய், கோதுமை மூட்டைகள், 5 எரிவாயு சிலிண்டா்கள், கட்டுக்கட்டாக குடும்ப அட்டைகள், அரிசியை பாா்சல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அன்வா் பாஷா, லாரி ஓட்டுநா் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com