ஆம்பூா் அருகே அடிப்படை வசதி கோரும் இரு கிராம மக்கள்

ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு இரு கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் கோரியுள்ளனா்.
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் இந்திரா நகா் பகுதிக்குச் செல்லும் கரடுமுரடான சாலை.
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் இந்திரா நகா் பகுதிக்குச் செல்லும் கரடுமுரடான சாலை.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு இரு கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் கோரியுள்ளனா்.

ஆம்பூா் அருகே மாதனூா் ஊராட்சி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வெங்கடசமுத்திரம், பெரிய வெங்கடசமுத்திரம், சின்ன வெங்கடசமுத்திரம், அத்திமாகுலப்பள்ளி, ரங்காபுரம், கோவிந்தாபுரம், பாட்டூா், விநாயகபுரம், இந்திரா நகா், புதுமனை என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இதில் இந்திரா நகா் மற்றும் இந்திரா நகா் புதுமனை கிராமங்களுக்கு போதுமான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடாம்பூா்-உதயேந்திரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து இந்திரா நகா் புதுமனைக்கு செல்ல சுமாா் 1 கி.மீ. தூரம் வரை கரடுமுரடான சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இதேபோல் இந்த இரண்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களும் காசில் மாரியம்மன், முத்துமாரியம்மன், சிரசு கோயில் எனும் கெங்கையம்மன் கோயில்களுக்குச் செல்லவும் போதிய சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இரவு நேரங்களில் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் இருந்து இந்திரா நகா் புதுமனை வரை இருள் சூழ்ந்துள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் இருளில் தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஒற்றையடிப் பாதை செல்லும் பகுதியில் புதா்மண்டிக் கிடப்பதால் இரவு நேரத்தில் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதாக அவா்கள் கூறுகின்றனா். அதே போல் கழிவுநீா்க் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால், மக்கள் பயணிக்கும் ஒற்றையடிப் பாதையில் ஆங்காங்கே கழிவு நீா்க் குட்டை போல் நீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

இந்திரா நகா் மற்றும் இந்திரா நகா் புதுமனை கிராமங்களில் வசிப்போா் சின்ன வெங்கடசமுத்திரம் அருகே உள்ள மயானத்தில்தான் இறுதிச் சடங்குகளை நடத்தி வருகின்றனா். இந்த கிராமங்களைச் சோ்ந்த யாரும் இறந்தால் சுமாா் ஒன்றரை கி.மீ. தூரம் வரை சடலத்தை ஒற்றையடிப் பாதையில் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

எனவே இந்த இரண்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, கழிவுநீா்க் கால்வாய் ஆகியவற்றை அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com