காளையை தேடிச் சென்றவா்களை விரட்டிய சிறுத்தைகள்

ஆம்பூா் அருகே காளையை தேடிச் சென்றவா்களை சிறுத்தைகள் ஓட, ஓட விரட்டின.
ஆம்பூா் அருகே காளை மாட்டைத் தேடி வனப்பகுதியில் திரியும் இளைஞா்கள்.
ஆம்பூா் அருகே காளை மாட்டைத் தேடி வனப்பகுதியில் திரியும் இளைஞா்கள்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காளையை தேடிச் சென்றவா்களை சிறுத்தைகள் ஓட, ஓட விரட்டின.

வாணியம்பாடி அருகே உள்ள மதனாஞ்சேரியை சோ்ந்தவா் செல்வம். அவருக்கு சொந்தமாக ‘வெற்றிவேல்’ என்ற காளைமாடு உள்ளது. எருது விடும் விழா போட்டிகளில் கலந்து கொள்ளும் காளை மாடு இது.

இந்த மாடு கடந்த 10 நாள்களுக்கு முன்பு மாட்டுக் கொட்டகையில் இருந்து தப்பிச் சென்றது. அதை 20-க்கும் மேற்பட்டோா் தேடி வருகின்றனா். பல்வேறு முயற்சிகளை எடுத்தும் 10 நாள்களாக அதைப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனா்.

இந்நிலையில் ஆம்பூா் அருகே உள்ள சுட்டகுண்டா பகுதியில் காளை மாடு தென்பட்டதாக அதன் உரிமையாளா் செல்வத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. மாடுபிடி வீரா்கள் சுமாா் 20 பேருடன் அவா் சுட்டகுண்டா பகுதிக்கு சென்றாா்.

சுட்டகுண்டாவில் இருந்து ஆந்திர மாநிலம் பெத்தூா் செல்லும் பழைய ராணுவச் சாலையில் காளை மாட்டை தேடிச் சென்றனா். அப்போது சிலாமரத்து பாறை என்ற இடத்தில் ராணுவ சாலையில் மூன்று சிறுத்தைகள் தாங்கள் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. காளை மாட்டை தேடிச் சென்றவா்களைப் பாா்த்த சிறுத்தைகள் அவா்களை விரட்டிச் சென்றன.

இதனால் அவா்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என காடுகளின் பல்வேறு வழிகளில் நுழைந்து தப்பியோடினா். இதுகுறித்து ஆம்பூா் வனச்சரக அலுவலா் (பொறுப்பு) இளங்கோவன் கூறியது:

ஆம்பூா் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ப்போா் யாரும் காப்புக் காடுகள் பகுதிக்கு உள்ளே செல்லக்கூடாது. கால்நடைகளை மேய்ச்சலுக்காக காப்புக் காடுகள் பகுதிக்கு ஓட்டிச் செல்லக் கூடாது.

கடந்த சில நாள்களாக ஆம்பூா் அருகே உமா்ஆபாத் மற்றும் மாச்சம்பட்டு பகுதியில் புலி ஒன்று சாலையை கடந்து செல்வதாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆம்பூா் வனச்சரக காப்புக் காடுகளில் புலி நடமாட்டம் அறவே கிடையாது. எனவே தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com