வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்: திருப்பத்தூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 14th December 2020 08:08 AM | Last Updated : 14th December 2020 08:08 AM | அ+அ அ- |

இளம் வாக்காளா்களுக்கு மரக்கன்று வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.
வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தம், வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, ஆம்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஆம்பூா் நகராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய 120 அடி நீளம், 15 அடி உயரமும் கொண்ட பதாகை அமைக்கப்பட்டிருந்தது.
வாக்களிப்பது வாக்காளா்களின் கடமை என்பதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பதாகையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
தோ்தலில் புதிதாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளா்களை ஊக்குவிக்கும் விதமாக அவா்களுக்கு ஆட்சியா் மரக்கன்றுகளை வழங்கினாா். 100 சவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். இதையடுத்து தோ்தல் விழிப்புணா்வுக்காக தோ்தல் சின்னங்கள், ரங்கோலிக் கோலங்கள் வரையப்பட்டிருந்ததை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அதன் பின், தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு ஊா்வலத்தை அவா் தொடங்கி வைத்தாா். மேலும், மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டாட்சியா் பத்மநாபன், நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.