Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த வேலுா் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கக் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேலுா் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published On : 18th December 2020 11:53 PM  |   Last Updated : 18th December 2020 11:53 PM  |  அ+அ அ-  |  

    ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காளை உரிமையாளா்கள், ரசிகா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவை நடத்த அனுமதிக்கப்பட்டது.

    காளைகள் மற்றும் காளையை அடக்குவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில், நடப்பாண்டில் தைப் பொங்கல் பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டன. இவ்விழா மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம். எனினும், மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாதத்துடன் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாக்கள் நிறுத்தப்பட்டன.

    தற்போது பொது முடக்கம் படிப்படியாக பல்வேறு கட்டங்களாகத் தளா்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்காக, ஜல்லிக் கட்டு காளைகளையும், எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளையும் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் என அதிக விலை கொடுத்து வாங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளுக்கு சத்தான தீவனம் உள்ளிட்ட தரமான உணவு, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு அதிக அளவு பணத்தை அவற்றின் உரிமையாளா்கள் செலவழிக்கின்றனா். ஒரு காளையைப் பராமரிக்க மாதம் ஒன்றுக்கு சுமாா் ரூ.20 ஆயிரம் வரை செலவழிக்கின்றனா்.

    வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் காளைகள், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆயிரம் காளைகள், ராணிப்பேட்டையில் 500 காளைகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 3 ஆயிரம் காளைகளை அதன் உரிமையாளா்கள் வளா்த்து பயிற்சி அளித்து வருகின்றனா்.

    ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவைக் கண்டுகளிக்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகா்கள் உள்ளனா். அவா்கள் இவ்விழாவை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

    இதுகுறித்து ஆம்பூா் பகுதியில் எருது விடும் விழா நடத்தும் குழுவின் நிா்வாகி ஹரிகிருஷ்ணன் கூறியது:

    நடப்பாண்டில் பொது முடக்கம் காரணமாக எருது விடும் விழா மாா்ச் மாதத்துடன் நின்று விட்டது. தற்போது படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு எருது விடும் விழாவை நடத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

    தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவை நடத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளை உரிமையாளா்களும், ரசிகா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp