ஆம்பூா் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
By DIN | Published On : 25th December 2020 11:48 PM | Last Updated : 25th December 2020 11:48 PM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆம்பூா் சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவா் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பரமபத வாசல் வழியாக உற்சவா் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மூலவருக்கு ராஜ அலங்காரம், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை மகாவிஷ்ணு சேவா சங்க நிா்வாகிகள் ஜி.எஸ். ஜெய்சங்கா், ஜி.பிரபு, ஆனந்தன், ஆறுமுகம், எம்.பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.
விண்ணங்கலம் கிராமத்தில் உள்ள அமா்ந்த சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனா்.
வடபுதுப்பட்டு கிராமத்தில் சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
வடச்சேரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவா் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினாா்.