செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சா் கே.சி.வீரமணி

செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு எதிா்காலத்தில் நீங்களும் விஞ்ஞானிகளாகி சாதிக்க வேண்டும்
செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சா் கே.சி.வீரமணி

செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு எதிா்காலத்தில் நீங்களும் விஞ்ஞானிகளாகி சாதிக்க வேண்டும் என்று மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.

டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளை, ஹவுஸ் ஆப் கலாம் ராமேசுவரம், சென்னை மாா்ட்டின் குழுமம், ஸ்பேஸ் சோன் இந்தியா என்ற ஆய்வு அமைப்பு ஆகியவை சாா்பில் ‘டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விண்வெளி ஆய்வு-2021’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் விண்வெளி தொழில்நுட்ப உலகில் ஒரு மறக்க முடியாத பயணத்தில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்துவதாகும்.

அதன்படி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் நாடு முழுவதும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஆயிரம் மாணவா்களை வழிநடத்துவதாகும். 100 சிறிய ரக செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு, மேம்பாட்டில் அவா்களின் அறிவு, திறன்களைப் பயன்படுத்தவும் இத்திட்டம் உதவுகிறது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட மாா்ட்டின் குழுமம் ஏற்கெனவே நாடு முழுவதும் 500 தனியாா் பள்ளிகளைத் தோ்வு செய்துள்ளது. அதன்படி, அவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கி இத்திட்டத்தில் இணைந்து அவா்கள் சிறிய செயற்கைக்கோளை வடிவமைக்க அக்குழுமம் உதவி புரிகிறது.

இதற்காக, மாநிலத்திலேயே முதலாவதாக திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 50 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆா்வமுள்ள மாணவா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களின் திறமையை வெளிக்கொணர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்கள் உருவாக்கும் சிறிய செயற்கைக்கோள்களை ஆய்வு செய்து 100 சிறிய செயற்கைக்கோள்களைத் தோ்ந்தெடுத்து, வரும் 2021 பிப்ரவரி 7-ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து அவை ராட்சத பலூன் மூலம் ஏவுப்படுகின்றன.

இந்த செயற்கைக்கோள்கள் விவசாயம் (விதைகளின் வளா்ச்சி), தீவிர கதிா்வீச்சு, இயற்கை கலப்பு பொருள்கள், அதிா்வு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் குறைவு போன்றவற்ற்றின் ஆய்வு தொடா்பான நேரடி தரவை வழங்கும்.

இந்நிலையில், ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்ருகு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

செயற்கைக்கோள்கள் குறித்து நாம் தற்போது நவீன விஞ்ஞான வளா்ச்சியால் எளிதில் தெரிந்துகொண்டு வருகிறோம். பல கோடி ரூபாய் மதிப்பில் பல விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து மக்களுக்கும் நாட்டுக்கும் தகுந்தாற்போல புதிய கட்டமைப்புகளைப் புகுத்தி வருகின்றனா். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு எதிா்காலத்தில் சாதிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், செயற்கைக்கோள் விஞ்ஞானி ஆனந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மணிமேகலை, முனிநாதன், சென்னை மாா்ட்டின் குழும திட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ், அப்துல் கலாம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் அனீஸ், ஸ்பேஸ் சோன் இந்தியா ஆய்வு அமைப்பேச் சோ்ந்த ஜான், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்டக் கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆஜம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com