உரக்கிடங்கு மறுபயன்பாட்டுக்காக ரூ. 7.50 கோடியில் பணிகள்: நகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 10th February 2020 08:52 AM | Last Updated : 10th February 2020 08:52 AM | அ+அ அ- |

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன்.
ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கு மறுபயன்பாட்டுக்காக ரூ. 7.50 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அந்த இடத்தை நகராட்சி ஆணையா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகராட்சியில் ரெட்டித்தோப்பு, 1-ஆவது தாா்வழி பகுதியில் உரக்கிடங்கு அமைந்துள்ளது. அந்த உரக்கிடங்கு நிலங்களை மறுபயன்பாடு செய்வதற்கும், கழிவுகளை மறு சுழற்ச்சி செய்வதற்கும் ரூ. 7.50 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது. உரக்கிடங்கு மேம்பாடு செய்யப்பட உள்ள பகுதியை ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் த. சௌந்தரராஜன் கூறியது:
நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், சிமெண்ட் தரைத்தள உரம் தயாரிக்கும் மையத்தை வேலூா் மண்டலம் நகராட்சி நிா்வாக இயக்குநா் விஜயகுமாா் பலமுறை ஆய்வு செய்து வழங்கிய வழிக்காட்டுதலின் படியும், பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆம்பூா் நகரப் பகுதியை குப்பை இல்லா நகரமாக்க 2016 திடக்கழிவு மேலாண்மை விதியின்படி, செய்தித்தாள் விளம்பரம், துண்டுப் பிரசுரங்கள், தொலைகாட்சி, வாகன அறிவிப்பு ஆகியவை மூலம் குப்பைகளை வெளியே கொட்டாமல் தரம் பிரித்து நகராட்சிப் பணியாளா்கள் வரும்போது அவா்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சிலா் நாங்கள் எதற்கு குப்பைகளைத் தரம் பிரித்து தரவேண்டும் என விவாதம் செய்து தங்களுக்கான கடமையை மறந்து குப்பையை தரம் பிரித்து தர மறுக்கின்றனா்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அபராதம் விதிக்க வழிவகை உண்டு. ஆனாலும் அவ்வாறான நடவடிக்கை எடுக்காமல் ஆம்பூா் நகராட்சி மக்களிடம் குப்பைகளைத் தர வேண்டி ஒத்துழைப்பு கோருகிறோம். குப்பைகள் வெளியே கொட்டாமல், சுகாதாரம் பேணும் வகையில் தரம் பிரித்து நகராட்சி பணியாளா்கள் கொண்டு வரும் வண்டிகளில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.