ஏப். 24-இல் அஞ்சல் துறை ஓய்வூதிய குறைதீா் நாள்
By DIN | Published On : 10th February 2020 08:17 AM | Last Updated : 10th February 2020 08:17 AM | அ+அ அ- |

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான ஓய்வூதிய குறைதீா் நாள் கூட்டம் கோயமுத்தூரில் வரும் ஏப்ரல் 24-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல் துறை ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்வதற்காக கோயமுத்தூா் ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் வரும் ஏப்.24-ஆம் தேதி காலை 11 மணிக்கு மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதிய குறைதீா் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல், ரயில்வே, தொலைபேசி ஆகிய துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சலக கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் ஏதேனும் இருப்பின் தங்கள் குறைகளை முழு விவரங்களுடன் எழுதி, முதுநிலைக் கணக்கு அலுவலா் (நிதிநிலை), அஞ்சல்துறைத் தலைவா், மேற்கு மண்டலம், கோயமுத்தூா்-641 002 என்ற முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன் சென்று சேரும்படி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். அஞ்சல் உறையின் மேல் ‘பென்ஷன் அதாலத்’ என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.