குடிநீா் கேட்டு குடங்களுடன் சாலை மறியல்.
By DIN | Published On : 10th February 2020 08:45 AM | Last Updated : 10th February 2020 08:45 AM | அ+அ அ- |

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அக்ராகரம் ஊராட்சி பாறையூா் வட்டம், இருசன் வட்டம் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக ஊராட்சி மூலம் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பம்ப்செட்டில் இருந்தும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து பல முறை ஊராட்சி அலுவலா்களிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளி-திருப்பத்தூா் சாலையில் அக்ராகரம் பேருந்து நிறுத்தம் அருகே காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா், ஊராட்சி செயலாளா் பூபதி ஆகியோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகளிடம் கூறி குடிநீா் பிரச்னைத் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.