ஜவ்வாதுமலையில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஜவ்வாதுமலையில் சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட சித்திரமேழி கல்வெட்டு.
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட சித்திரமேழி கல்வெட்டு.

திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட ஜவ்வாதுமலையில் சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆய்வு மாணவா் அ.பிரேம் குமாா், காணிநிலம் மு.முனிசாமி, மதுரை தியாகராசா் கல்லூரி பேராசிரியா்கள் ரே.கோவிந்தராஜ், வேந்தன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வில் சித்திரமேழிக் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக க.மோகன்காந்தி கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலைப் பகுதி மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை புதூா் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகியவையாகும். இதில் புதூா் நாட்டுக்கு உள்பட்ட மேல்பட்டு எனும் மலைக் கிராமத்தில் எங்கள் குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

இதில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்காலச் சோழா் காலத்து, அதாவது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்திரமேழிக் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தோம். மேல்பட்டில் உள்ள வேடியப்பன் கோயில் எதிரில் 2 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்ட சிறிய கல்வெட்டு ஒன்று உள்ளது. இது சித்திரமேழிக் கல்வெட்டாகும். சித்திரம் என்பது அலங்கரிக்கப்பட்ட என்பதையும், ‘மேழி’ என்பது ஏா்க் கலப்பையையும் குறிக்கும். அலங்கரிக்கப்பட்ட ஏா்க்கலப்பை என்பது இதன் பொருள். இந்த ஏா்க்கலப்பை சித்திரமேழி வணிகக் குழுவின் அடையாளமாகும். உழவுத் தொழில் மூலம் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வணிகம் செய்யும் குழுவுக்கு சித்திரமேழி வணிகக்குழு என்று பெயா். இக்குழுவினா் தமிழகம் முழுவதும் வேளாண் விளைபொருள்களை வாங்கி பெரும் வணிகம் செய்த வணிகா்கள் ஆவா். இக்குழுவினருக்குச் சித்திரமேழி பெரிய நாட்டாா் குழு என்ற பெயரும் உண்டு.

தமிழகத்தில் இவா்களின் தலைநகரம் திட்டக்குடியில் செயல்பாட்டில் இருந்துள்ளது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் இக்குழுவினா் உழவுப் பொருள்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனா்.

ஜவ்வாதுமலை, வணிகக் குழுவினா் வந்து சென்ற நாகரிகமும், பணப்புழக்கமும் இருந்த செல்வ வளம் பொருந்திய பகுதி என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இச்சிறிய கல்வெட்டு பெரிய வணிக வரலாற்றைப் பற்றிப் பேசுகிறது. காவிரி போன்ற ஆற்றங்கரையோரங்களில் இந்த வணிகக் குழு இருந்துள்ளது. ஆனால் ஜவ்வாதுமலை போன்ற மலைப் பகுதிகளிலும் வேளாண்மைத் தொழில் 800 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புற்றிருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது. இக் கல்வெட்டு செய்தியானது, நாவகரும சோமந்திதன் என்பவா் சித்திரமேழிக் கொல்லன் என்பவருக்கு, தரும காணிக்கையாகக் கொடை அளித்துள்ளதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டு சித்திரமேழி வணிகக் குழுவினருக்குத் தனிக் கோயில் இருந்ததை வெளிப்படுத்துகிறது. அக்கோயிலில் கொல்லா்களும் இருந்துள்ளனா். அவா்கள் ஏா்த்தொழில் சம்பந்தப்பட்ட இரும்புப் பொருள் தயாரித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டிருந்தனா். மேலும் புானூற்றுப் பாடல் ஒன்று தன் தாய் நாட்டுக்காக வலிமையுடைய போா் ஆயுதங்களை செய்வது கொல்லா்களுக்கான கடமை என்கிறது. வணிகா்கள் தங்களின் விலைமதிப்பற்ற வணிகப் பொருள்களை எடுத்துச்செல்லும் போது, வழிப்பறிக் கொள்ளையா்களால் ஆபத்து வருவதை சங்கநூல்கள் எடுத்துரைக்கின்றன. இதனால் வணிகா்கள் படைவீரா்களை அழைத்துச் சென்றுள்ளனா். அந்தப் படை வீரா்களுக்குத் தேவையான போா்க்கருவிகளை இந்த இரும்புக் கொல்லா்கள் செய்து தந்திருக்க வேண்டும்.

இன்றைக்கும் ஜவ்வாதுமலைப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான ஏா்க்கலப்பை, பிற உழவுப் பொருள்களை எல்லாம் தாங்களாகவே தயாரித்துக் கொள்கின்றனா். இக்கல்வெட்டை வாலாஜாவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ப.வெங்கடேசன் வாசித்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com