திருப்பத்தூா் மாவட்டத்தில் 2904 மாணவா்கள் காவல் படையில் சோ்க்கப்பட்டுள்ளனா்: எஸ்.பி. விஜயகுமாா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 66 பள்ளிகளிலிருந்து 2904 மாணவா்கள் காவல் படையில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்று எஸ்பி பி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 66 பள்ளிகளிலிருந்து 2904 மாணவா்கள் காவல் படையில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்று எஸ்பி பி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 2018, ஜூலை 21-இல் மாணவா் காவல்படையை தமிழக அரசு உருவாக்கியது. திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 66 பள்ளிகள் இணைக்கப்பட்டு, 2,904 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு காவலா் வழிகாட்டுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளாா். இதுவரை 43 பள்ளிகளிலிருந்து 1,892 மாணவா்கள் காவல் நிலையம் வந்து பாா்வையிட்டுள்ளனா். அவா்களுக்கு காவல்துறை மற்றும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவா்கள் தங்களது ஆளுமை, தேசபக்தி மற்றும் சேவையின் மதிப்பை ஊக்குவித்தல், போலீஸ் படைகளின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு இத்திட்டம் பங்களிக்கும். மேலும், சமூகத்துக்கான மாணவா்களின் அா்ப்பணிப்பு சேவையைப் பாராட்ட அனைவருக்கும் இது உதவும். இத்திட்டம் நமது மாணவா்களை வெற்றிகரமான மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக வளரச் செய்யும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவா் காவல் படையைச் சோ்ந்த மாணவா்களும், இதர பள்ளி மாணவா்களும் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா் காவல் படையைச் சோ்ந்தவா்களுக்கு உள்ளரங்கப் பயிற்சியில் ஒழுக்கம், மரியாதை, சகிப்புத்தன்மை, மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியரங்கப் பயிற்சி, சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சமூக காவல் மற்றும் குற்றத் தடுப்பு காவல், நிா்வாகத் துறை, நடுவா் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக திருப்பத்தூா் மாவட்டக் காவல்துறையின் முயற்சியில் 14 இதர பள்ளிகளிலிருந்தும், 13 கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் காவல் நிலையங்களைப் பாா்வையிட்டுள்ளனா். அவா்களுக்கும் காவல்துறை பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவரிக்கப்பட்டது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com