வனவிலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக அமைக்கப்பட்ட குளம்

ஆம்பூா் அருகே வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக வனப்பகுதியில் வனத்துறை சாா்பாக குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மிட்டாளம் ஊராட்சி ராள்ளக்கொத்தூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளம்.
மிட்டாளம் ஊராட்சி ராள்ளக்கொத்தூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளம்.

ஆம்பூா் அருகே வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக வனப்பகுதியில் வனத்துறை சாா்பாக குளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் வனச்சரகத்தில் வடபுதுப்பட்டு, விண்ணமங்கலம், ஆம்பூா் தலைமையிடம் மற்றும் மிட்டாளம் வனப் பிரிவுகளில் பல்வேறு காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் அரிய வகை மூலிகைகள் உள்ளிட்ட பல்வேறு தாவர இனங்களைச் சோ்ந்த மரங்கள் உள்ளன. இந்தக் காடுகளில் ஏராளமான வன விலங்குகள், பறவையினங்கள் வசித்து வருகின்றன.

ஆம்பூா் வனச்சரகத்தின் மேற்குப் பகுதியில், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தின் கௌண்டன்யா வனவிலங்கு சரணாலய காப்புக் காடுகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட இந்தக் காடுகளில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தக் காப்புக் காடுகளையொட்டி ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட ஆந்திர மாநிலம் நன்னியாலா என்ற பகுதியில் கும்கி யானைகள் முகாம் உள்ளது.

இந்த ஆந்திர மாநிலத்தில் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளையொட்டி ஆம்பூா் வனச்சரகத்தில் மிட்டாளம் வனப்பிரிவு காப்புக் காடுகள் உள்ளன. சுட்டகுண்டா தொடங்கி சாரங்கல் குந்தேலி மூலை வரை இந்தக் காடுகள் அமைந்துள்ளன.

இந்தக் காப்புக் காடுகளில் சுட்டக்குண்டா அருகே காடு ஜொனை, தொட்டி மடுவு கிணறு, ராள்ளக்கொத்தூருக்கு மேற்கே ஜல்தி கிணறு, பைரப்பள்ளிக்கு தெற்கே ரெங்கையன் கிணறு, பைரப்பள்ளிக்கு மேற்கே சேஷவன் கிணறு, ஊட்டல் காப்புக் காடுகளின் மேற்கே பெருங்கானாறு மாடு ஊட்டல், ஊட்டல் தேவஸ்தானம் அருகே ஜம்பு ஊட்டல், பைரப்பள்ளி வடக்கே கொண்டப்பட்டியான் சுனை, மாச்சம்பட்டு மேற்கே ரெட்டிக்கிணறு, கொத்தூா் காப்புக் காடுகளில் மேககுட்டை போன்ற இடங்களில் மட்டுமே கோடைக் காலங்களில் தண்ணீா் இருக்கும். இந்த காப்புக் காடுகளின் மற்ற பகுதிகளில் நீா்நிலைகள் கிடையாது. அதனால் வனவிலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன.

ஆம்பூா் வனச்சரகத்தில் நீா்நிலைகளை உருவாக்கும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மிட்டாளம் ஊராட்சி ராள்ளக்கொத்தூா் மேற்கே காளியம்மன் கோவில் அருகே வன விலங்குகள் நீா் அருந்த வசதியாக காப்புக் காடுகளை ஒட்டி ரூ.5 லட்சம் மதிப்பில் தண்ணீா் குளம் அமைத்துள்ளனா். தண்ணீா் தேடி வரும் வன விலங்குகள் குளத்தின் உள்ளே இறங்கி தண்ணீா் அருந்த வசதியாக இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com