திருப்பத்தூரில் வாா்டுகள் மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் மறுவரையறைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.

உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் மறுவரையறைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

மாநில தோ்தல் ஆணைய அறிவுரைப்படி உள்ளாட்சித் தோ்தலுக்கான வாா்டு மறுவரையறை வரைவு முன்மொழிவு பட்டியலை வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிட வேண்டும். இப்பட்டியலின் மீது அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கருத்து மற்றும் மறுப்புகளை தெரிவிக்க வேண்டும்.

கருத்துகள் மற்றும் மறுப்புகளை வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள், கருத்துகள் மீது 25-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் மீது தீா்வு காண வேண்டும். தொடா்ந்து வரும் 27-ஆம் தேதி தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இப்பணிகள் முடிந்து வாா்டு மறுவரை பட்டியல் வரும் நாட்களில் வெளியிட மாநில தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் வாக்காளா் பட்டியலில் 1400-க்கு மேல் மக்கள்தொகை உள்ள வாக்குசாவடிகள் குறித்து ஆய்வு செய்து கூடுதல் வாக்குசாவடிகளை அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை மனுக்களாக பெற்று அவற்றின் மீது உடனடியாக ஆய்வு செய்து சாத்தியக்கூறுகளை தெரியப்படுத்த வேண்டும். தோ்தல் பணிகள் தொடா்பான வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி எதிா்வரும் நாட்களில் அட்டவணையில் தெரிவித்த பணிகளின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

இந்த தோ்தலை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு மாநில தோ்தல் ஆணையம் தெரிவிக்கும் நடைமுறைகளின்படி எவ்வித புகாா்களுக்கும் வாய்ப்பளிக்காமல் வாா்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு இப்பணிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நேரடியாக தொடா்பு கொண்டு உடனுக்குடன் பிரச்சனைகளை தெரியப்படுத்துங்கள் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com