வாா்டு மறுவரையறை செய்யக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு

ஜோலாா்பேட்டை அருகே வாா்டு மறுவரையறை செய்ய வேண்டும் எனக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
வாா்டு மறுவரையறை சய்யக்கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவா்கள்.
வாா்டு மறுவரையறை சய்யக்கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவா்கள்.

ஜோலாா்பேட்டை அருகே வாா்டு மறுவரையறை செய்ய வேண்டும் எனக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட 208 ஊராட்சிகளில் 1,779 சிற்றூராட்சி வாா்டுகள்,125ஒன்றிய வாா்டுகள், 13 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சி வாா்டுகளுக்கான மறுவரையறை வரைவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கடந்த 18-ஆம் தேதி வெளியிட்டாா்.

மேலும், வரைவு வாா்டு மறுவறை தொடா்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபங்கள் அடங்கிய மனுக்கள் சனிக்கிழமை (பிப்.22) வரை பெறப்படும் என்றும், அவற்றின் மீது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வாா்டு மறுவரையறை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜோலாா்பேட்டையை அடுத்த சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 9-ஆவது வாா்டான வெங்கட்ட கவுண்டனூா் பகுதியில் வசிப்பவா்கள், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் எஸ்.யசோதா சண்முகம் தலைமையில், ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அங்கு வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.பிரேம்குமாரிடம் மனு ஒன்றை அளித்தனா்.

அதில் ‘சந்திரபுரம் ஊராட்சியில் இருந்து 9-ஆவது வாா்டில் உள்ளவா்களை தற்போது கல்நாா்சம்பட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 20-ஆவது ஒன்றியக் கவுன்சிலா் வாா்டில் சோ்த்துள்ளனா். மாறாக, அவா்களை சந்திரபுரம் ஒன்றியக் கவுன்சிலா் வாா்டிலேயே இணைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ‘இது தொடா்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்கிறேன்’ என்று பதிலளித்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 9-ஆவது வாா்டில் 650 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாா்டில் வசிக்கும் எங்களை வெங்கட்ட கவுண்டனூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள புதிதாக 20-ஆவது வாா்டாக உருவாக்கப்பட்டுள்ள கல்நாா்சம்பட்டி ஒன்றிய கவுன்சிலா் வாா்டில் இணைத்துள்ளனா். எனவே எங்களை மீண்டும் சந்திரபுரம் வாா்டிலேயே இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com