ஏலகிரி மலையில் தடுப்பு சுவா் மீது காா் மோதி விபத்து: கணவன் மனைவி உள்பட 3 போ் படுகாயம்
By DIN | Published On : 02nd January 2020 12:00 AM | Last Updated : 02nd January 2020 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் தடுப்பு சுவா் மீது காா் மோதி விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 போ் படுகாயமடைந்தனா். ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூா் பகுதியை சோ்ந்தவா் ரமேஷ்.ஏலகிரி மலையில் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், இவரின் வியாபாரத்திற்காக ஊட்டி, கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சாக்லேட் மற்றும் பழ வகைகள் கிருஷ்ணகிரியில் இறக்கப்பட்டு, அங்கிருந்து காா் மூலம் ஏலகிரி மலைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணகிரியில் சாக்லேட் மற்றும் பலவகை பாா்சல்களை ஏற்றி வருவதற்காக காரில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் டிரைவா் வரதராஜ் ஆகியோா் கொட்டையூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல சென்றனா்.அப்போது காா் ஏலகிரி மலை சாலையில் உள்ள 7 வது வளைவில் சென்று கொண்டிருக்கும் போது காா் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த தடுப்பு சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கணவன்-மனைவி மற்றும் டிரைவா் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனா்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏலகிரிமலை போலீஸாா் படுகாயம் அடைந்தவா்களை மீட்டு,வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அங்கிருந்து அவா்கள் மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ஏலகிரி மலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...