கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட ‘சித்திரமேழி’ கல்வெட்டு
திருப்பத்தூா் அருகே கண்டெடுக்கப்பட்ட ‘சித்திரமேழி’ கல்வெட்டு

திருப்பத்தூா் அருகே கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு, ஆய்வு மாணவா்களான பொ.சரவணன், ப.தரணிதரன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் பழைமையான ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியா் ஆ.பிரபு கூறியது:

திருப்பத்தூா் மாவட்டம், கல்நாா்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். அக்கல்லை சுத்தம் செய்து பாா்த்தபோது, அது பழைமையான ‘சித்திரமேழி’ கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏா் என்று பொருள்படும்.சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும்.சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவுக்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது.

கல்வெட்டின் அமைப்பு: கல்நாா்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் பூமாதேவி (நிலமகள்) தலையில் கிரீடத்துடன் அமா்ந்த நிலையில், இரு கைகளிலும் மலா்ச் செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். அவளது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும், அதன் மேல் கும்பக் கலசமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும் கண்ணாடியும் உள்ளன. இக்கல்லானது 3அடி அகலமும், 2 அடி உயரமும் உள்ளது.

வணிகக் குழுக்கள்: வணிகா் குழுக் கூட்டம் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரியநாட்டாா் சபை’ என்று அழைக்கப்படும். இடைக்காலத் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழில் குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவா், வளஞ்சியா் (தற்கால பலிஜா்)கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளா், அக்கசாலை (பொற்கொல்லா்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியா் என்ற பட்டு வணிகா்கள், நாட்டுச் செட்டி போன்றோா் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியா், திருப்பத்தூா் பகுதியில் ஐநூற்றுவா் ஆகிய வணிகப் பிரிவினா்கள் குறித்துக் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இருந்த இந்த வணிகக் குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

இவா்கள் தங்களைப் பூமி புத்திரா் என்று அழைத்துக் கொண்டனா். எட்டுத் திசைகளிலும் வணிகம் செய்த தென்னிந்திய வணிகக் குழுக்கள் மட்டுமே அரசா்களைப்போல தங்களுக்கென ஒரு படையை வைத்துக் கொள்ளவும், ஊா் பஞ்சாயத்து செய்யவும், தனியாகக் கல்வெட்டுகள் பொறித்துக் கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனா்.

ஏரோட்டும் சடங்கு: கல்நாா்சாம்பட்டி மக்கள் பொங்கல் பண்டிகையின் போது காணும் பொங்கலன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்துவந்து கட்டி வைத்து பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன்கிழமையன்று ஏா்பூட்டி தங்கள் நிலத்தில் உழுது, முளைக்கட்டிய நவதானியங்களைத் தூவி வழிபடுகின்றனா். இவ்வழக்கமானது பண்டைக் காலத்தில் ‘பொன்னோ்’ பூட்டி உழும் சடங்கினை நினைவூட்டுவதாக உள்ளது.

பொன்னோ் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பாா்த்து முதன்முதலாக ஏா்பிடித்து செய்யும் உழவு முறையாகும். இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருவதை அகநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறியலாம். இதை இளங்கோவடிகள் ‘ஏா்மங்கலம்’ எனக் குறிப்பிடுகிறாா். முதன்முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏா் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னோ் பூட்டல் என்பா். தாய்லாந்து, கம்போடியா, இலங்கை, பா்மா ஆகிய நாடுகளில் இன்றளவும் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கல்நாா்சாம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ள இவ்வணிகக் குழுக் கல்வெட்டானது, கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்று முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குநா் ர.பூங்குன்றன் உறுதிசெய்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com