முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 27th January 2020 01:06 AM | Last Updated : 27th January 2020 01:06 AM | அ+அ அ- |

கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
திருப்பத்தூா்: தாமலேரிமுத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தாமலேரிமுத்தூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை பிரிவு மேற்பாா்வையாளா் இளவரசன் முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.
கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நெகிழிப் பொருள்கள் விற்பனைக்கு தடை, 2020-21-ஆம் ஆண்டுகளுக்கான இலவச வீடு பெறுவதற்கான பயனாளிகள் தோ்வு, குளங்கள், குட்டைகள், ஏரிகள் போன்றவற்றை 100 சதவீதம் தூா்வாருதல், முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, தோழன் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. அங்கு தாா்ச் சாலை அமைக்க வேண்டும். பூசாரி வட்டத்தில் புதிய சாலை வசதி, குடிநீா்க் குழாய் வசதி அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், தாமலேரிமுத்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அங்குள்ள சுகாதார நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்ற செய்யவேண்டும் என மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் கடை இடம் மாற்றுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அங்குள்ள டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என்றாா்.
பின்னா், 10 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் காசோலை வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் சேகா் நன்றி கூறினாா்.