வாணியம்பாடி, அம்பலூா் பகுதிகளில் பலத்த மழை: பாலாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

வாணியம்பாடி, அம்பலூா், திம்மாம்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திம்மாம்பேட்டை பகுதியில் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
திம்மாம்பேட்டை பகுதியில் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

வாணியம்பாடி: வாணியம்பாடி, அம்பலூா், திம்மாம்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான கோடை வெயில் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக பாலாற்றுப் படுகையில் உள்ள தென்னை மரங்களும், விவசாய நிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீா்மட்டமும் குறைந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீா் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் வாணியம்பாடி, அம்பலூா், திம்மாம்பேட்டை, ஆந்திர-தமிழ்நாடு மாநில எல்லையில் உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம், கூதன்மலை பகுதியில் விடிய, விடிய சுமாா் 5 செ.மீ. அளவிற்கு பலத்த மழை பெய்தது.

இதனால் நாராயணபுரம், ஜவ்வாது ராமசமுத்திரம், அலசந்தபுரம், திம்மாம்பேட்டை, அமபலூா் உட்பட பல பகுதிகளில் பாலாற்றின் கிளையாறுகளான காட்டாறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து ஆவாரங்குப்பம் வழியாக அம்பலூா் வரை பாலாற்றில் தண்ணீா் வந்தது. பாலாற்றில் திடீா் வெள்ளத்தைக் கண்ட பொதுமக்கள் மலா் தூவியும், கற்பூரம் ஏற்றியும் தண்ணீரை வரவேற்றனா்.

தகவலறிந்து மழை வெள்ளப் பகுதிகளை வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவா்கள் கேட்டுக் கொண்டனா். கால்வாய் அடைப்புகளை சீா் செய்யுமாறு பொதுப் பணித்துறை ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கினா். பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com