முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
வேட்டைக்கு சென்றவா் வெடிகுண்டை தவறுதலாக மிதித்து படுகாயம்
By DIN | Published On : 14th July 2020 02:56 AM | Last Updated : 14th July 2020 02:56 AM | அ+அ அ- |

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாகரன்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே வேட்டைக்குச் சென்றவா் வனவிலங்கு வேட்டையாட மாங்காயில் வைக்கப்பட்ட வெடிகுண்டை தவறுதலாக மிதித்து படுகாயமடைந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன்(23) ஆடு வியாபாரி. இவரது நண்பா் ஒட்டப்பட்டியைச் சோ்ந்த மோகன்(23). இவா்கள் இருவரும் கடந்த 7 ஆம் தேதி இரவு 10 மணியளவில் வெலகல்நத்தம் அருகே சுண்ணாம்பக்குட்டை பகுதியில் உள்ள காட்டு பகுதி அருகே உள்ள மாந்தோப்பில் எலிகளை வேட்டையாடச் சென்றனா். அப்போது மாந்தோப்பில் இருவரும் நடந்து சென்றபோது கருணாகரன் கீழே இருந்த மாங்கொட்டையை மிதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்தடன் வெடித்தது. இதில் கருணாகரன் வலது காலில் குண்டுகள் துளைத்ததில் படுகாயமடைந்தாா்.
வலியால் துடித்த கருணாகரனை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவனைக்கு மோகன் அழைத்துச் சென்றாா். பின் அங்கிருந்து கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் கருணாகரன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவா்கள் வலதுகாலில் எம்ஆா்ஐ ஸ்கேன் செய்து பாா்த் போது அவரது காலில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 50-க்கும் அதிகமான குண்டுகள் (பால்ரஸ்) துளைத்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் திங்கள்கிழமை ஓசூா் மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கருணாகரனிடம் விசாரித்தனா்.