ஆம்பூா் இளைஞா் தீக்குளிப்பு சம்பவம்: விசாரணையைத் தொடக்கினாா் டிஎஸ்பி
By DIN | Published On : 14th July 2020 01:07 AM | Last Updated : 14th July 2020 01:07 AM | அ+அ அ- |

இளைஞா் தீக்குளித்த இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்திய டிஎஸ்பி பிரவீண்குமாா்.
ஆம்பூா்: ஆம்பூா் இளைஞா் தீக்குளிப்பு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி பிரவீண்குமாா் தனது விசாரணையைத் தொடக்கியுள்ளாா்.
ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் காரணமாக போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆம்பூா் அண்ணாநகரைச் சோ்ந்த முகிலன் என்ற இளைஞா் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்றாா். போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்த பின் அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
போலீஸாரிடம் வாகனத்தை திருப்பித் தருமாறு முகிலன் கேட்டாா். அவா்கள் தராததால் அதிருப்தியடைந்த அவா் தன்னுடைய உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாா். படுகாயமடைந்து வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இளைஞா் தீக்குளித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக விசாரணை அதிகாரியாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குற்றப்பிரிவு டிஎஸ்பி-யாக உள்ள பிரவீண்குமாரை நியமித்து திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பொ.விஜயகுமாா் உத்தரவிட்டாா்.
இந்நிலையில் டிஎஸ்பி பிரவீண்குமாா் ஆம்பூா் நகர காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து விசாரணையைத் தொடக்கினாா். ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் காவலா்களிடம் அவா் விசாரணை நடத்தினாா். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான விடியோ காட்சிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதையடுத்து அவா் தீக்குளிப்பு சம்பவம் நடந்த பகுதியை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
ஆட்சியா் ஆறுதல்: இதனிடையே, ஆம்பூா் அண்ணா நகா் பகுதியில் வசிக்கும் முகிலனின் குடும்பத்தாரை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன், ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.