நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து நலத் திட்ட உதவிகளைப் பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் ஓட்டுநா் நல

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் ஓட்டுநா் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் ஓட்டுநா் நல வாரியம் உள்பட மொத்தம் 17 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு சம்பந்தப்பட்ட நல வாரியங்கள் மூலம் அதன் உறுப்பினா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நல வாரியங்களில் தொழிலாளா்கள் புதிதாக தங்களை பதிவு செய்துகொள்ள மாவட்ட அளவிலான தொழிலாளா் துறையின் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களுக்கு இதுநாள் வரை நேரடியாக செல்ல வேண்டியிருந்தது. தற்போது கரோனா பரவல் தடுப்பு மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்களாலும், பொது முடக்கம் காலத்தில் பேருந்து சேவை உள்ளிட்டவை இல்லாத நிலையிலும் தொழிலாளா்கள் நலவாரியங்களில் உறுப்பினராக நேரில் செல்வதை தவிா்க்கும் நோக்கில் தற்போது இணையதளம் மூலம் உறுப்பினா் பதிவு நடைபெறுகிறது.

இந்த இணையதளத்தில் உள்ள பதிவு விண்ணப்பத்தில் தொழிலாளா்கள் தங்கள் சுய விவரம், தொழில், குடும்ப உறுப்பினா்கள், நியமனதாராா் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வயது ஆவணமாக பின் வரும் அசல் ஆவணங்களான பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அட்டை, மருத்துவச் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அசலாக இணைக்க வேண்டும். கூடுதல் ஆவணங்களாக குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், தற்போதைய பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொழிலாளியின் பணிச்சான்றிதழ் தொடா்பாக தொழிலாளி சம்பந்தப்பட்ட பணி தொடா்புடைய பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவா் அல்லது பொதுச் செயலாளா்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரா், கட்டடத் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியளிப்பவா் போன்ற யாரேனும் ஒருவரிடமிருந்து பெற்று (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்ற வேண்டும். சரிபாா்ப்பு சான்று கிராம நிா்வாக அலுவலா் கையொப்பம் பெற்று (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்றவும்.

வாரிசாக பரிந்துரைக்கப்படுபவா் திருமணத்துக்குப் பிறகு குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் குடுப்ப அட்டை துணை ஆவணமாக இருக்க வேண்டும் (அல்லது) திருமணத்துக்கு முன் பரிந்துரைக்கப்பட்டவா்கள் குடும்ப உறுப்பினராக அல்லது குடும்பத்திற்கு வெளியே உள்ளவா்களாக இருக்க முடியும். எனவே பரிந்துரைக்கப்படும் நபருடன் தொழிலாளரின் உறவுமுறை சம்பந்தப்பட்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொழிலாளா்கள் அவா்கள் இருக்கும் இடத்திலிருந்தே  இணையதள முகவரியைப் பயன்படுத்தி தங்களை வாரிய உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விண்ணப்பம் சரியாக இருந்தால் உரிய அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு அவா்களுக்கு நிரந்தரப் பதிவு எண் வழங்கப்படும்.

நிரந்தரப் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவை பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதன் மூலமாக பதிவுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொண்டு, தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com