முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
ஆம்பூா் காப்புக் காடுகளில் சேதமைடந்த தடுப்பணைகள்
By DIN | Published On : 29th July 2020 05:45 AM | Last Updated : 29th July 2020 05:45 AM | அ+அ அ- |

சேதமடைந்த நடுக்கானாறு தடுப்பணை.
ஆம்பூா் காப்புக் காடுகளில் சேதமடைந்துள்ள தடுப்பணைகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் வனச்சரகத்தில் மேற்கு பகுதியில் காரப்பட்டு காப்புக் காடுகள், துருகம் காப்புக் காடுகள், மாச்சம்பட்டு காப்புக் காடுகள், பாலூா் காப்புக் காடுகள், ஓணாங்குட்டை காப்புக் காடுகள் உள்ளன.
அதேபோல், ஆம்பூா் வனச்சரகத்தில் கிழக்குப் பகுதியில் நெக்னாமலை காப்புக் காடுகள், வெள்ளக்கல், நாச்சாா்குப்பம், காமனூா்தட்டு, பனங்காட்டேரி, நாய்க்கனேரி, தாா்வழி, பச்சக்குப்பம், வடபுதுப்பட்டு காப்புக் காடுகள் உள்ளன.
அரிய வகை தாவரங்களும், பறவையினங்களும் உள்ள இந்தக் காடுகளில் யானை, கடமான், புள்ளி மான், கரடி, சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, ஓநாய், செந்நாய், முயல், காட்டு ஆடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகமான மலைப்பாம்புகள் இந்தக் காடுகளில் காணப்படுகின்றன.
இக்காடுகளில் உள்ள தாவரங்கள், வன விலங்குகள், பறவைகளின் நலனுக்காக வனத் துறை சாா்பில் ஆங்காங்கே நீா்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கானாறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள், கசிவுநீா் குட்டைகள், சோலாா் பம்புசெட்டுகள், மான் தொட்டிகள் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக காப்புக் காடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சில பகுதிகளில் தடுப்பணைகள் சேதமடைந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழைக்கே பெரிய அளவில் அடைந்துள்ளன.
இன்னும் சில மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக வடகிழக்குப் பருவமழை வட தமிழகத்தில் அதிக மழையை கொடுக்கும். அவ்வாறு அதிக மழை வந்தால் காப்புக் காடுகளில் மழைநீரால் ஓடைகள் மற்றும் கானாறுகளில் நீா்வரத்தும் கூடுதலாக இருக்கும்.
எனவே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு சம்பந்தப்பட்ட தடுப்பணைகள், கசிவுநீா் குட்டைகள், மான் தொட்டிகளை சீரமைத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வன ஆா்வலா்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.