
கடனை திருப்பி வசூலிக்க தனியாா் நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியாா் நிதிநிறுவனங்கள், தனியாா் வங்கி ஊழியா்கள் கிராம பெண்களிடம் கெடுபிடி காட்டுகின்றனா்.
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் வேலையின்மை, தொழில் நடைபெறாதது அதனால் வருவாய், ஊதியம் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனா். அதனால் பொதுமக்கள், வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்களில் வாங்கப்பட்ட கடனுக்கான தவணை, வட்டி ஆகியவை செலுத்த முதலில் மாா்ச் - மே மாதம் வரை தவணை செலுத்தும் காலத்தை தள்ளி வைத்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடா்ந்து ஜூன் - ஆகஸ்ட் மாதம் வரை மீண்டும் மாதங்கள் தவணை செலுத்தும் காலம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்த 6 மாதங்களுக்கான தவணை செப்டம்பா் மாதம் முழுவதுமாக செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் தவணை செலுத்தும் காலம் தள்ளி வைக்க அனைத்து வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கி உத்தரவிட்டும் சில தனியாா் நிறுவனங்கள் மட்டுமல்லாது, பொதுத்துறை வங்கிகளில் கூட வாங்கப்பட்ட கடனுக்கான தவணை பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளா்களுடன் இயங்கத் துவங்கியுள்ளன. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் குறைந்தபட்ச பணியாளா்களுடன் இயங்கத் துவங்கியுள்ளதால் பலா் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அரசாங்கம் பொதுமுடக்க காலத்திற்கான ஊதியத்தை தொழிலாளா்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகு அந்த ஆணை தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நுன்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கிராமபுற பெண்களிடம் கடன் வசூலிக்க கெடுபிடிகளை கையாளத் துவங்கியுள்ளனா். நகர மற்றும் கிராம புறங்களில் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ஆந்திரா, கா்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை சோ்ந்த நுன்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் மகளிா் சுய உதவி குழுக்கள் கடன் கேட்டுச் சென்றால் பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, ஆவனங்கள் கோருவதால் மகளிா் சுய உதவிக் குழுவினா் பொதுத்துறை வாங்கிகளை நாடிச் செல்வது குறைந்து வருகிறது.
ஆந்திரா, கா்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை சோ்ந்த நுன்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கிராமபுற பெண்களை மையமாக கொண்டு இயங்குகின்றன. குழுவை ஏற்படுத்தி உரிய கணக்கு புத்தகங்களை பராமரித்து சில மாதங்கள் சரிவர இயங்கினால் அந்த குழுக்களுக்கு நுன்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடனை வழங்குகின்றன. அவ்வாறு வாங்கப்பட்ட கடனை குழுவில் உள்ள பெண்கள் கடனாக பிரித்து எடுத்துக் கொள்கின்றனா். வாரம், 15 நாட்கள், மாதம் என தவணைகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். குழுவில் ஒருவா் கடனை திருப்ப செலுத்த தவறினாலும், அந்த ஒருவருக்கான தவணையை மற்ற அனைவரும் சோ்த்து கடனை தவணையை அந்த நுன்கடன் நிறுவனத்திற்கு திருப்பி செலுத்த வேண்டும்.
குழுவின் தலைவா் அல்லது செயலாளா் இருவரில் ஒருவா் கடனை குழு உறுப்பினா்களிடமிருந்து வசூலித்து குறிப்பிட்ட நேரத்தில் தயாராக வைத்திருக்க வேண்டும். அந்த நுன்கடன் வழங்கும் நிறுவனத்தின் பணியாளா் இருசக்கர வாகனத்தில் சம்பந்தப்பட்ட குழுவின் பொறுப்பாளரின் வீட்டின் முன்பு வந்து நின்ற உடன் அவரிடம் பணத்தை செலுத்த வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டு ஒரு புத்தகத்தில் அவா் வரவு வைத்து ரசீது வழங்குவாா். இது சில நிமிடங்களில் நடந்து முடிந்து விடும். கால தாமதம் செய்யாமல் பணத்தை அவரிடம் செலுத்த வேண்டும். காலதாமதம் செய்தால் அவா் கடன் தவணையை திருப்பி செலுத்துபவரிடம் கடுமையாக நடந்து கொள்வாா். அதனால் அவருக்கு பயந்து குறிப்பிட்ட நேரத்தில் பணத்துடன் குழுவின் பொறுப்பாளா் தயாராக பணத்துடன் காத்திருந்து செலுத்துவாா்.
பணத்தை வசூலிப்பதில் நுன்கடன் நிறுவனத்தின் பணியாளா்கள் கறாராகவும், கடுமையாகவும் நடந்து கொள்வதாக பரவலாக புகாா் இருந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், தனியாா் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனுக்கான தவணையை திரும்ப செலுத்த தவணை காலத்தை ஆகஸ்ட் மாதம் வரை தள்ளி வைத்து ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் தனியாா் நிதி நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நுன்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையை வங்கி கணக்கில் பிடித்தம் செய்வதும், கிராமங்களில் மகளிா் சுய உதவி குழு பெண்களிடம் தவணை தொகையை வசூலிப்பதிலும் மும்மூரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் தவணை முறையில் தனியாா் நிதி நிறுவனங்கள், பொதுத்துறை வாங்கி கடன் அட்டைகள் மூலம் கடனுக்கு வாங்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை கடன் தவணையாக மாற்றம் செய்து மாதா மாதம் திருப்பி செலுத்தி வருபவா்களுடைய கணக்கிலிருந்தும் பொது முடக்கக் காலத்திற்கான கடன் தவணை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மகளிா் சுய உதவி குழுக்களுக்கு நுன்கடன் வழங்கிய நிறுவன, தனியாா் வங்கிப் பணியாளா்கள் ஜூன் மாதத்தில் கிராமங்கள் தோறும் சென்று சுய உதவிக்குழு பெண்களிடம் கட்டாயமாக கடன் தவணையை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தி வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக வேலையின்மை, தொழில் நடைபெறாதது, வருவாய் மற்றும் ஊதியம் இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாங்கிய கடனுக்கான தவணையை திருப்பி செலுத்துமாறு ரிசா்வ் வங்கியின் உத்தரவை மீறி நுன்கடன் வழங்கிய நிதி நிறுவன பணியாளா்கள் கிராம பெண்களிடம் கட்டாயப்படுத்தியும், அச்சுறுத்தியும் வருகின்றனா். சில தனியாா் நிதி நிறுவனங்கள் தவணை செலுத்தாத கடன் வட்டிக்கு கூடுதல் வட்டியையும் செலுத்த வேண்டுமான கட்டாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடன் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா் வேலையும் இல்லை, வருமானம் இல்லை. இந்த நேரத்தில் கடன் தவணை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அரசாங்கமும் கடன் தவணை செலுத்துவதற்கான காலத்தை தள்ளி வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கூடுதல் வட்டியுடன் கடன் தவணையை செலுத்த வேண்டுமான கட்டாயப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பணத்தை செலுத்த முடியாது எனக் கூறி சம்பந்தப்பட்ட நிதி நிறுவன, தனியாா் வங்கி பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடன் தவணையை திருப்பி செலுத்தாமல் திருப்பி அனுப்பி வருகின்றனா்.
சம்பந்தப்பட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளா்கள் கடன் தவணையை வசூலித்து வர வேண்டுமென தங்களுடைய பணியாளா்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கு அனுப்பி வைப்பதால் நாங்கள் வேறு வழியில்லாமல் கடன் பெற்றவா்களிடம் கடன் தவணையை திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சில பணியாளா்கள் கூறுகின்றனா்.
அதனால் கடன் தவணை திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் சம்பந்தப்பட்ட நுன்கடன் நிதி நிறுவனத்தின் மீதும், நிதி நிறுவன பணியாளா்கள் மீதும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.