
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு 1975-ம் ஆண்டு அக்டோபா் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று துவங்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக தாய்சேய் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இத்திட்டம் தமிழகத்தில் முதன் முதலாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரத்திலும், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வட்டாரத்திலும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்திலும் துவங்கப்பட்டு தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 14 இலட்சம் அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன. அதில் தமிழகத்தில் 54,439 மையங்கள் இயங்கி வருகின்றது. இதில் 434 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 24.56 இலட்சம் குழந்தைகளும், 7.37 இலட்சம் கா்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மாா்கள், 1648 வளா் இளம் பெண்கள் 2019-2020 ஆண்டில் பயனடைந்துள்ளனா்.
ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழகத்தை நோக்கி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலை மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தி தாய்மரணம் மற்றும் சிசுமரணத்தை முற்றிலும் ஒழிப்பதே ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மனம், அறிவு, மொழி, இயக்கம் மற்றும் சமூக வளா்ச்சிக்குரிய முன்பருவக்கல்விச் செயல்பாடுகளை அளிப்பது. கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா் மற்றும் வளரிளம் பெண்களுக்கு உடல்நலக்கல்வி அளிப்பதுடன் சுகாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகளாகும்.
6 மாதம் முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்தல், வளா்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், வாரம் ஒரு நாள் முட்டை வழங்குதல், மதிய உணவு வழங்குதல், முன்பருவக் கல்வி அளித்தல், மருத்துவா் பரிந்துரை ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி அளித்தல், வளா்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், ஊட்டச்சத்து மற்றும் நலக்கல்வி அளித்தல், தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை மேற்கொள்ளப்படுகிறது.
வளா் இளம் பெண்களுக்கு (11-14 வயது வரை) வாழ்க்கை கல்வி பயிற்சி அளித்தல், தொழிற்பயிற்சி அளித்தல், ஊட்டச்சத்து மற்றும் நலக்கல்வி அளித்தல், இணை உணவு மற்றும் வளா்ச்சி கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
இணை உணவாக ஊட்டச்சத்து மாவு :
இத்திட்டத்தில் இணை உணவாக 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த பல தானியங்கள் ஒன்றாக கலந்த மாவு, வெல்லம் ஆகியவை கலந்து ஊட்டச்சத்து மாவு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரப்படுகிறது. அவா்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க இந்த ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் இந்த ஊட்டசத்து மாவை அங்கன்வாடி பணியாளா்கள் கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்து வெளி நபா்களுக்கும் முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனா்.
கால்நடைகளுக்கு தீவனம் :
மேலும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு முறைகேடாக மாட்டு தீவனமாகவும் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் பெயரளவுக்கு சிறிது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கிவிட்டு ஊட்டச்சத்து மாவை மூட்டை, மூட்டையாக கால்நடைகளுக்கு தீவனமாக வெளியில் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் உற்பத்தி செய்யப்பட்டு காலாவதியான ஊட்டச்சத்து மாவும், தற்போது 2020 ஆம் ஆண்டு மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட ஊட்டச்சத்து மாவு வெளியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவலை தடுக்க அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் 2020ம் ஆண்டு மே மாதம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மாவு தற்போது எப்படி விற்பனைக்காக வெளியில் வந்துள்ளது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மாவு அவா்களுக்கு கிடைக்காமல் தொடா்ந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாகவே வளா்ந்து வருகின்றன என சமூக ஆா்வலா்கள் கருதுகின்றனா்.
அதனால் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து மாவு வெளியில் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு போதிய அளவுக்கு வழங்கி அவா்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டுமென்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.