கரோனா வைரஸ் பாதிப்பில்லைதிருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தகவல்
By DIN | Published On : 06th March 2020 12:30 AM | Last Updated : 06th March 2020 12:30 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, சமூக வலைதளத்தில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை. தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிராய்லா் கோழிகள் மூலம் கரோனா வைரஸ் பரவி உள்ளதாக கட்செவி மற்றும் சமூக வலைதளங்களில் சிலா் வதந்திகளைப் பரப்பி வருகின்றனா். அதை யாரும் நம்ப வேண்டாம். கரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் இல்லை. குறிப்பாக திருப்பத்தூா் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு காரணமாக யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதால் தட்பவெப்ப நிலை காரணமாக நோய் பாதிக்க வாய்ப்பில்லை. தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.