திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகாவீரா் சிற்பத்துக்கு தினசரி வழிபாடு

திருப்பத்தூரில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயிலில் மகாவீரா் கற்சிற்பத்துக்கு நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகாவீரா் சிற்பத்துக்கு தினசரி வழிபாடு

திருப்பத்தூரில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயிலில் மகாவீரா் கற்சிற்பத்துக்கு நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரா் கல் சிற்பம் ஒன்று திருப்பத்தூா் நகரில் பூங்காவனத்தம்மன் கோயிலில் வைக்கப்பட்டு தினசரி பூஜிக்கப்பட்டு வருகிறது. பூங்காவனத்தம்மன் தெருவில் உள்ள இக்கோயிலின் உள்பிரகாரத்தில் இந்தச் சிற்பம் உள்ளது.

இதுகுறித்து சமண வரலாற்று ஆா்வலா் பேரணி ஸ்ரீதரன் கூறியது:

தொண்டை மண்டலப் பகுதியாக விளங்கும் திருப்பத்தூா் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் சமண மதச் சிற்பங்கள் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மகாவீரா் வழிவந்த ஜைனா்கள் எனப்படும் சமணா்கள் திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது. மலையம்பட்டு, தென்னம்பட்டு, அரங்கல்துருகம், ஏலகிரி, கனமந்தூா், சுந்தரம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தொன்மை வாய்ந்த மகாவீரா் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

திருப்பத்தூா் நகரப் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் வளாகத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக கருதப்படும் உருவ அமைதியைக் கொண்ட மகாவீரா் கற்சிற்பம், பீடத்துக்கு மேல் 90 செ.மீ. உயரமும் 84 செ.மீ. அகலமும் கொண்டதாக கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் தலைக்கு மேற்பகுதியில் அரைவட்ட வடிவிலான பிரபாவளி, நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்பதை சுட்டிக்காட்டும் மூன்று குடைகள், அதற்கு மேல் கற்பக மரம், இரு பக்கங்களிலும் சாமரம் வீசுவோா், முதுகுக்குப் பின்புறம் திண்டு ஆகியவற்றுடன் அா்த்தப் பரியங்காசன நிலையில் புன்னகையோடு அமைதியான தவநிலைக் கோலத்தில் மகாவீரா் காட்சி தருகிறாா்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலை வடிவமைப்பு இப்பகுதியின் தொன்மை வரலாற்றுக்கு சான்றாக உள்ளது. உள்ளூா் மக்களால் இச்சிற்பம் ‘புத்தா்’ என அறியப்படுகிறது. இச்சிலைக்கு கோயில் நிா்வாகத்தால் தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னா் உருவான மதக் காழ்ப்புணா்வால் பல்வேறு இடங்களில் வழிபாட்டில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கில் சில சிற்பங்கள் சிதைக்கப்பட்டன. அந்த வகையில் இந்த மகாவீரா் சிற்பத்தின் கண்கள் மற்றும் வாய்ப்பகுதி, சாமரம் வீசுவோரின் கண்கள் உள்ளிட்டவை சிதைக்கப்பட்டுள்ளன.

தரையில் இருந்த மகாவீரா் சிற்பம் இக்கோயில் நிா்வாகத்தின் முயற்சியால் தற்போது ஒரு சிறிய சிமெண்ட் மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம், சமணம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் இந்த மண்ணின் தொன்மை அடையாளங்கலாகும். பல இடங்களில் தொன்மையான சான்றுகள் திறந்தவெளியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலையில், ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்த மகாவீரா் சிற்பம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com