அரசு விரைவுப் பேருந்தில் செங்கோட்டை- சென்னைக்கு இருவேறு கட்டணம்

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் இருவேறு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமத்துவ மக்கள் கழகம் புகாா் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் இருவேறு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமத்துவ மக்கள் கழகம் புகாா் தெரிவித்துள்ளது.

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட மக்கள்குறைதீா் முகாமில் சமத்துவ மக்கள் கழக தென்காசி மாவட்டச் செயலா் அகரக்கட்டு எஸ். லூா்து நாடாா், ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளனிடம் அளித்த மனு:

செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத, படுக்கை, இருக்கை வசதிகள் கொண்ட தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 தினங்களுக்கு ஒரு கட்டணமும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலனுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த கட்டண முறை தனியாா் சொகுசுப் பேருந்துகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தனியாா் சொகுசுப் பேருந்துகள்போல, அரசுப் பேருந்துகளில் கட்டணம் வசூல்செய்தால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்வாா்கள்? எனவே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவா் அளித்த மற்றொரு மனு: செங்கோட்டையிலிருந்து ஆய்க்குடி, சுரண்டை, சங்கரன்கோவில் வழியாக சென்னைக்கு கடந்த 35 ஆண்டுகளாக அரசு விரைவுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தப் பேருந்து இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் ஓா் அரசு விரைவுப் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. எனவே, ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த அரசு விரைவுப் பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com