உதயேந்திரம், ஆலங்காயத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணி
By DIN | Published On : 25th March 2020 07:19 AM | Last Updated : 25th March 2020 07:19 AM | அ+அ அ- |

ஆலங்காயம் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளா்கள்.
உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜி உத்தரவின்படி வாணியம்பாடியை அடுத்த உதேயந்திரம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா். அனைத்து வாகனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் லைசால் கிருமிநாசினியைத் தெளித்தனா்.
ஆலங்காயம் சிறப்புநிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 15 வாா்டுகளிலும் கரோனோ வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்களை வழங்கினா். பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகள் உள்பட அனைத்து இடங்களிலும் டிராக்டா், ஆட்டோக்கள் மூலம் கிருமிநாசினி தெளித்தனா்.
மேலும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள 144 தடை உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றி கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் செயல் அலுவலா் கணேசன் கேட்டுக் கொண்டாா்.