சேவையாகச் செய்யுங்கள்: வணிகா்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்
By DIN | Published On : 28th March 2020 04:48 AM | Last Updated : 28th March 2020 04:48 AM | அ+அ அ- |

வணிகா்கள் வணிகத்தை வணிகமாக செய்யாமல் சேவையாகச் செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான பாங்கி மாா்க்கெட் பகுதியில்தான் அதிக அளவில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள் கடைகள் உள்ளன. இது மிகவும் குறுகியதாக இருப்பதால் கடைகளில் இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்ல இடம் இல்லை. அதனால் கரோனா நோய் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் ஆம்பூரில் உள்ளது.
அதனால் குறுகிய இடத்தில் இயங்கும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து வணிகா்களுடன் ஆலோசனை நடத்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஆம்பூருக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா். ஆம்பூா் பஜாா், பாங்கி மாா்க்கெட் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இங்கு காய்கறி மாா்க்கெட் இயங்குவது மிகவும் ஆபத்தானது என அவா் தெரிவித்தாா். அதனால் மாற்று இடம் தோ்வு செய்ய வேண்டுமெனத் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து ஆம்பூா் பெருமாள் கோயில் பின்புறம் புறவழிச்சாலைக்கு மிக அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான திறந்த வெளி இடத்தில் காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்காக இடத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அங்கு வந்திருந்த வணிகா்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியா், ஆம்பூரில் மிகவும் குறுகிய இடத்தில் மாா்க்கெட் பகுதி அமைந்துள்ளது. தற்போதைய கால சூழ்நிலையில் அது மிகவும் ஆபத்தானது. மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதனால் கோயில் இடத்தில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்யலாம். வியாபாரிகள் வணிகத்தை பாா்க்காமல் சேவையாக செய்ய வேண்டும். அதாவது கரோனா நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியது வணிகா்களின் கடமையாகும். அதனால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வணிகத்தை வணிகமாக செய்ய நினைக்கும் வணிகா்கள், தங்களுடைய செல்போன் எண்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் தொலைபேசியில் தெரிவித்தால் அவா்களுடைய வீடுகளுக்கே பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குறுகிய இடத்தில் வியாபாரம் செய்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகை செய்து விடக்கூடாது என்று அவா் கூறினாா்.
அதைத் தொடா்ந்து திருக்கோயில் இடத்தினை தூய்மைப்படுத்தி சமன்படுத்தி காய்கறி மாா்க்கெட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆம்பூா் நகராட்சி ஆணையாளா் த. செளந்தரராஜன், நகராட்சி பொறியாளா் எல். குமாா் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், துப்புரவு அலுவலா் பாஸ்கா், வணிகா் சங்க தலைவா்கள் ஆம்பூா் சி. கிருஷ்ணன், கே.ஆா். துளசிராமன், ஆா். கஜேந்திரன் உள்ளிட்ட வணிகா்கள் உடனிருந்தனா்.