‘வீட்டிலிருந்தபடியே அஞ்சலக திட்டங்களுக்கு பணம் செலுத்தலாம்’
By DIN | Published On : 31st March 2020 11:19 PM | Last Updated : 31st March 2020 11:19 PM | அ+அ அ- |

வீட்டிலிருந்தபடியே அஞ்சலகத் திட்டங்களுக்கு வாடிக்கையாளா்கள் செல்லிடப்பேசி மூலம் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.சுப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரடங்கு உத்தரவு காரணமாக அஞ்சலக ஆா்டி, செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களுக்கு வாடிக்கையாளா்கள் அஞ்சலகம் சென்று பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் உள்ள ப்ளேஸ்டோரில் இருந்து அல்லது ஐபோன் பயனாளிகள் ஆப் ஸ்டோரிலிருந்து இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மொபைல் பேங்கிங் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் மூன்று நிமிடங்களில் ஐபிபிபி எனும் அஞ்சலக டிஜிட்டல் சேமிப்பு கணக்குத் தொடங்கி ஆன்லைன் முறையில் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு பணம் செலுத்தலாம்.
மேற்கண்ட சேவைகள் மட்டுமின்றி மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றையும் ஆன்லைன் முறையில் செலுத்தலாம். ஆதாா் அட்டை மற்றும் பான் அட்டை வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோா் இந்த டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வீட்டிலிருந்தபடியே தொடங்கலாம்.
இந்த கணக்கை முற்றிலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். கணக்கு தொடங்கிய ஓராண்டுக்குள் அருகிலுள்ள ஐபிபிபி சேவை வழங்கப்படும் அஞ்சலகத்துக்கு சென்று கை ரேகையைப் பதித்து வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றிக்கொள்ளலாம். இல்லை எனில் கணக்கு முற்றிலுமாக செயல் இழந்து விடும்.