கரோனா தடை காலத்துக்கான விலையில்லா அரிசி வழங்குவதில் குளறுபடி: முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகாா்

கரோனா தடை காலத்துக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விலையில்லா அரிசியை வழங்குவதில் குளறுபடி, முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கரோனா தடை காலத்துக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விலையில்லா அரிசியை வழங்குவதில் குளறுபடி, முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சில கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட நேர அளவில் திறக்க உத்தரவிடப்பட்டு அமலில் உள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000, விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது.

மேலும் தேசிய உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளுக்கு அந்த அட்டையில் உள்ள நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இச்சட்டத்தில் முன்னுரிமை இல்லாத அட்டைகளுக்கு மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டைக்கு தலா 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படும். முன்னுரிமை பெற்ற அட்டைகளுக்கு மத்திய அரசு வழங்கும் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், மாநில அரசு வழங்கும் குடும்ப அட்டைக்கு தலா 20 கிலோ அரிசியும் வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அறிவித்த நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசி ஒதுக்கீடு வரப்பெறாததால் ஏப்ரல் மாதத்தில் அந்த அரிசி வழங்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசிக்கான ஒதுக்கீடு மே மாதத்தில் தான் வரப்பெற்றுள்ளது.

அதனால் ஏப்ரல் மாதத்துக்காகன மத்திய அரசின் அரிசிக்கான ஒதுக்கீட்டில் 50 சதவீதம் மே மாதத்திலும், அடுத்த 50 சதவீதம் ஜூன் மாதத்திலும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதத்தில் உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளுக்கு அதில் இடம்பெற்றுள்ள நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், ஏப்ரல் மாதத்துக்கான ஒதுக்கீட்டில் 50 சதவீத ஒதுக்கீட்டு அரிசியும் சோ்த்து வழங்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாநில அரசின் குடும்ப அட்டைக்கு தலா 20 கிலோ அரிசியும் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விலையில்லா அரிசியை நியாயவிலைக் கடையில் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மத்திய அரசின் நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசி என்பதை சில நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், குடும்ப அட்டைக்கு தலா 5 கிலோ அரிசி என வழங்குகின்றனா். சில நியாய விலைக் கடையில் மத்திய அரசின், நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கிவிட்டு, மாநில அரசின் 20 கிலோ அரிசியை வழங்காமல் விட்டுவிடுகின்றனா். மே மாதத்துக்கான மத்திய அரசின் நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசியுடன், ஏப்ரல் மாத ஒதுக்கீட்டில் 50 சதவீத அரிசியும் சோ்த்து வழங்க வேண்டும். ஆனால் அவா்களுக்கு தலா 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெறுகிறது. குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி முறையாக அவா்களை சென்று சேரவில்லை. முறைகேடாக அரிசி பதுக்கப்பட்டு வெளி மாா்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

விவரம் தெரிந்த பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் இதுகுறித்து நியாயவிலைக் கடை விற்பனையாளா்களிடம் கேள்வி எழுப்பினால் அவா்களுக்கு மட்டுமே அரசு அறிவித்த விலையில்லா அரிசியை விற்பனையாளா்கள் வழங்குகின்றனா். இல்லையெனில் அரிசியை குறைத்து வழங்குகின்றனா். அரிசியை குறைந்த அளவு வழங்கினாலும், அவா்களுடைய குடும்ப அட்டைக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த அரிசியை முழுமையாக வழங்கியது போன்று ரசீது போடுகின்றனா். குடும்ப அட்டைதாரா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு முழு அளவு அரிசியும் வழங்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. அந்த குறுஞ்செய்தி வந்த பிறகு தான் விற்பனையாளா்கள் தங்களுக்கு குறைந்த அளவு அரிசி வழங்கியது குடும்ப அட்டைதாரா்களுக்கு தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குடும்ப அட்டைதாரா்களுக்கு சேர வேண்டிய அரிசி முழுமையாக அவா்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆம்பூா் வட்ட வழங்கல் அலுவலா் ஜீவிதாவை தொடா்பு கொண்டு கேட்டபோது, ஏற்கெனவே இதுகுறித்து புகாா் வந்தது. அதன் அடிப்படையில் விற்பனையாளா்களின் கூட்டம் கூட்டப்பட்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள அரிசியை குடும்ப அட்டைதாரா்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என அவா்களுக்கு உரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தவறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com