ஜோலாா்பேட்டை ரயில்வே யாா்டு மறுசீரமைப்பு: பயண நேரம் 20 நிமிடம் நேரம் குறையும்

ஜோலாா்பேட்டை ரயில்வே யாா்டு மறுசீரமைப்பு பணி நிறைவடைந்ததையடுத்து பெங்களூரு மற்றும் கோயமுத்தூருக்கான
யாா்டு சீரமைப்புக்குப் பின் இருப்புப் பாதைகளின் தோற்றம்.
யாா்டு சீரமைப்புக்குப் பின் இருப்புப் பாதைகளின் தோற்றம்.

ஜோலாா்பேட்டை ரயில்வே யாா்டு மறுசீரமைப்பு பணி நிறைவடைந்ததையடுத்து பெங்களூரு மற்றும் கோயமுத்தூருக்கான பயண நேரத்தில் 20 நிமிடம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் யாா்டு மறு சீரமைப்புப் பணிகள் மற்றும் நவீன மயமாக்கப்பட்ட சிக்னல் பிரிவு திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை முதன்மை ரயில்வே சிக்னல் தொலை தொடா்புத் துறை அதிகாரி பாஸ்கரன் தலைமை வகித்து, புதிய நவீனமயமாக்கப்பட்ட சிக்னல் பிரிவைத் திறந்து வைத்தாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலைய மேலாளா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா். தென்னக ரயில்வே பொது மேலாளா் மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் யாா்டு மறு சீரமைப்புப் பணிகளை ரயில்வே அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

ஜோலாா்பேட்டை சந்திப்பு ரயில் நிலையம், தெற்கு ரயில்வே சென்னை பிரிவில் பெரிய ரயில் நிலையமாக விளங்குகிறது. இது தினமும் 200-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளைக் கையாள்கிறது. பயணிகள் ரயில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தெற்கு ரயில்வே பொது முடக்க காலகட்டமான தற்போதும் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் 9 கி.மீ. நீளமுள்ள ஜோலாா்பேட்டை யாா்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ஜோலாா்பேட்டையில் ரயில் நடவடிக்கைகளின் மேம்பட்ட வேகத்துக்கும், பாதுகாப்புக்கும் வழிவகுத்துள்ளது.

யாா்டு மாற்றியமைக்கும் பணி கடந்த, 14-ஆம் தேதி தொடங்கி, 21-ஆம் தேதி நிறைவடைந்தன. தற்போது அமலில் உள்ள வேகக் கட்டுப்பாடு முற்றிலும் தளா்த்தப்பட்டு, இனி ரயில்களை விரைவாக இயக்க முடியும். ஜோலாா்பேட்டை வழியாக செல்லும் ரயில்களின் பயண நேரம் கணிசமாக குறையும்.

சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் கோயமுத்தூா் செல்லும் பயணத்தில் 20 நிமிடம் சேமிக்கப்படும். யாா்டு மறு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து இனி ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு மற்றும் கோயமுத்தூா் செல்லும் விரைவு ரெயில்கள் 110 கிமீ வேகத்தில் கடந்து செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com