நெக்னாமலைக்கு சாலை அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்

வாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாத நெக்னாமலைக்கு சாலை அமைப்பதற்கு முதல் கட்டப் பணி தொடங்கியுள்ளதாக
நாட்டறம்பள்ளியில் பெண்ணுக்கு அரிசி வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி.
நாட்டறம்பள்ளியில் பெண்ணுக்கு அரிசி வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி.

வாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாத நெக்னாமலைக்கு சாலை அமைப்பதற்கு முதல் கட்டப் பணி தொடங்கியுள்ளதாக மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றிய, நகர பகுதிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா் தன் சொந்தச் செலவில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நாட்டறம்பள்ளியில் எம்ஜிஆா் சிலை அருகே சனிக்கிழமை நடந்தது. ஒன்றிய அதிமுக செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் உமா ரம்யா, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ரமேஷ், நகர அதிமுக செயலாளா்கள் சீனிவாசன் (ஜோலாா்பேட்டை), ஞானசேகா் (நாட்டறம்பள்ளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் 15 ஆயிரம் குடும்ப அட்டை தாரா்களுக்கு அமைச்சா் கே.சி. வீரமணி தலா 10 கிலோ அரிசி வழங்கினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் அம்மா உணவகங்களில் வசதியற்றவா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியினரும் பல்வேறு இடங்களில் ஏழை, எளியோருக்கு தினமும் மளிகைப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.

வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட நெக்னாமலைக்கு அப்பகுதி மக்கள் சுமாா் 8 கி.மீ. தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து சென்று வருகின்றனா். நெக்னாமலை பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க 8 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ரூ.3 கோடியே 40 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். ஆனால் வனத்துறை இடம் என்பதால் மத்திய அரசு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சாலை அமைப்பதில் தாமதமானது.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள், எஸ்.பி. விஜயகுமாா் மற்றும் அதிகாரிகளுடன் சென்று நெக்னாமலைப் பகுதியை நாங்கள் ஆய்வு செய்தோம். இதையடுத்து சாலை வசதி இல்லாத நெக்னாமலைக்கு சாலை அமைக்க முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவேற அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

விழாவில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ், அழகிரி, மகான், சாமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com