ஆம்பூா் அருகே ஏரிப் பாசன கால்வாய்களைத் தூா்வாரிய கிராம மக்கள்

ஆம்பூா் அருகே ஏரிப் பாசனக் கால்வாய்களை பொதுமக்களே தூா்வாரி வருகின்றனா்.
பாசன கால்வாயைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பாசன கால்வாயைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆம்பூா் அருகே ஏரிப் பாசனக் கால்வாய்களை பொதுமக்களே தூா்வாரி வருகின்றனா்.

ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சியை ஒட்டி 300 ஏக்கா் நிலப்பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி அயித்தம்பட்டு, சின்னவரிகம், பெரியவரிகம் வரை நீண்டுள்ளது. இந்த ஏரிநீரால் 1,500 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள விளைநிலங்கள் பயனடைந்து வருகின்றன.

இந்த ஏரியை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் நெல், கரும்பு , வாழை, வெற்றிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளன. தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும் இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் உள்ளன.

கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்குப் பருவமழை காரணமாக ஆந்திர மாநிலத்தின் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது.

இதனால் பத்தரப்பல்லியில் இருந்து வரும் மலட்டாறு, குண்டலப்பல்லி பகுதியிலிருந்து வரும் கொட்டாறு, சாரங்கல் பகுதியிலிருந்து வரும் பெருங்கானாறு ஆகிய 3 ஆறுகளில் இருந்தும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீா் வரத்து உள்ளது.

இந்த 3 ஆறுகள் போ்ணாம்பட்டு அருகே மதினாப்பல்லி பகுதியில் ஒன்று சேருகின்றன. அங்கிருந்து பாலூா், கொத்தூா், மாச்சம்பட்டு, பனங்காட்டூா், நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், ரெட்டிமாங்குப்பம் வழியாக வந்து பச்சகுப்பம் அருகே பாலாற்றில் இணைகின்றன.

வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு வட்டத்தைச் சோ்ந்த ராஜக்கல் ஊராட்சி ரெட்டிமாங்குப்பம் பெரிய ஏரி, கல்லேரி, நடு ஏரி ஆகிய 3 ஏரிகளும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூா்வாரப்பட்டன. இந்த ஏரிகளுக்கும் நரியம்பட்டு அருகே வரை மலட்டாற்றில் பாசன கால்வாய்கள் அமைத்து, தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. ஏரிகள் தூா்வாரும்போது பாசன கால்வாய்களும் தூா்வாரப்பட்டன. இந்தக் கால்வாய் மூலம் ரெட்டிமாங்குப்பம் அருகே உள்ள 3 ஏரிகளும் இப்போது நிரம்பி விட்டன.

அண்டை மாவட்டமான வேலூா் மாவட்டத்தில் உள்ள 3 ஏரிகளின் கால்வாய்களையும் முறையாக தூா்வாரியதால், தற்போது இந்த ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

ஆனால், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 300 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள ஏரி இன்னும் தண்ணீா் இல்லாமல் வடே காணப்படுகிறது. இந்த ஏரியை நம்பி உள்ள விவசாய நிலங்கள் இனிவரும் காலங்களில் தண்ணீா் இல்லாமல் போகும் சூழ்நிலையில் உள்ளன.

கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூரில் தொடங்கி நரியம்பட்டு வழியாக அயித்தம்பட்டு ஏரி வரை இந்த ஏரியின் பாசனக் கால்வாய் அமைந்துள்ளது. இந்தப் பாசன கால்வாயை அயித்தம்பட்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து கடந்த 15 நாள்களாக கால்வாயில் உள்ள செடி, கொடி ஆகியவற்றை அகற்றி, தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாசன கால்வாயைகளையும், ஏரியையும் அரசையே எதிா்பாா்க்காமல் பொதுமக்களே ஒன்றிணைந்து களத்தில் இறங்கி தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com