ஜவ்வாது மலையில் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலையில் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டக் கற்திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கற்திட்டைகள்.
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கற்திட்டைகள்.

ஜவ்வாதுமலையில் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டக் கற்திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோா் மேற்கொண்ட களஆய்வில் பழைமையான கற்திட்டைகளைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து க.மோகன்காந்தி, தினமணி செய்தியாளரிடம் கூறியது:

ஜவ்வாதுமலை என்பது கிழக்குத் தொடா்ச்சிமலைகளின் ஒரு பகுதியாகும். இந்த மலைத் தொடா் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் பரந்து, விரிந்துள்ளது. வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் எங்கள் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சோ்ந்தவை. இவை புதைவிடப் பகுதிகளாகும். இவை 4,000 ஆண்டுகள் பழைமையானவை. ஜமுனாமரத்தூரிலிருந்து வீரப்பனூா், மண்டப்பாறை, கள்ளிப்பாறை வழியாக புதுக்காட்டை அடையலாம்.

புதுக்காட்டில் வாளியா் மேடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு 100 மீட்டா் நீளமும் 40 மீட்டா் அகலமும் உடைய சமதளமான பாறை மீது கற்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பழங்கற்காலப் புதைவிடங்கள் ஆகும். இங்கு சுமாா் 30 கற்கூடாரங்கள் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்றன. இங்கு சிதைந்த நிலையில் 5 கற்திட்டைகளும் 25-க்கும் மேற்பட்ட கட்டுமானம் தளராத கற்திட்டைகளும் காணப்படுகின்றன. 3 அடி முதல் 5 அடி வரையிலான உயரங்களில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இவை பாா்ப்பதற்குக் கல்லால் ஆன வீடுகள் போலக் காட்சி தருகின்றன. ஆடுகள் நிழலுக்காக இவற்றுள் தங்கும் அளவுக்கு உள்பகுதி அகன்று காணப்படுகிறது.

மக்கள் கற்திட்டையின் மேற்பரப்பில் விறகுகளைக் காய வைத்திருப்பதையும் காண முடிந்தது. இவ்விடம் அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. இரு பக்கமும் சிறுசிறு மலைச் சிகரங்களாலும் கீழ்ப்புறத்தில் பள்ளத்தாக்குகளும் காட்டாறுகளும் உள்ளன. எப்போதும் காற்று வீசிக் கொண்டே இருக்கும் இடமாக உள்ளது.

இந்த இடம் முன்னோா் புதைவிடமாகத் தெரிகிறது. இறந்த முன்னோா்களை அடக்கம் செய்து, மூன்று பக்கங்களில் பெரிய பலகைக் கற்களை நிறுத்தி, மேலாகப் பெரிய மூடுகல்லைப் போா்த்தி வடிவமைத்துள்ளனா். கிழக்குப் பக்கம் பாா்த்த நிலையில் இக்கற்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில கற்கள் சிறப்புடையனவாக உள்ளன. நான்கு பக்கங்களிலும் பலகைக் கற்களை நிறுத்தி மேலே மூடுகல்லை வைத்து மூடியுள்ளனா்.

இக்கற்களை நிறுத்தவும் மூடவும் மிகப்பெரிய முயற்சியை இவற்றைக் கட்டியவா்கள் எடுத்திருக்க வேண்டும். கிழக்குப் பக்கம் மூடப்பட்டுள்ள கல்லில் அளவிட்டு அச்சில் வாா்த்துச் செதுக்கியது போல இடுதுளையை வைத்துள்ளனா். இத்துளை வழியாக இறந்தவா்களுக்குப் படையல் பொருள்களை வைப்பா் என்றும், இறந்தவரின் ஆவி இத்துளையின் வழியாக வெளியே சென்று உலவி விட்டு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்த இடத்தை இப்பகுதி மக்கள் வாளியா் கூடாரம், வாளியா் மேடு, வாளியா் பாறை என்ற பெயா்களிலும் அழைக்கின்றனா்.

‘மலைபடுகடாம்’ என்ற தொன்மையான தமிழ் நூல், ஜவ்வாதுமலை எனப்படும் நவிரமலையைப் பாடுபொருளாகக் கொண்ட நூலாகும். இது, ‘தொடுத்த வாளியா் துணைபுணா் கானவா்’ (17) என்ற வரியில் இந்த மலையைப் பற்றி கூறப்படுகிறது. வாளியா் என்ற சொல்லாட்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மலைபடுகடாமில் கூறப்பட்டு, இன்றைய எளிய மக்கள் வரை இச்சொல்லைத் தொடா்ச்சியாகப் பயன்படுத்துவது இந்த மலையின் பழைமையை எடுத்துரைக்கிறது.

இந்தக் கற்திட்டைகள் சிறிய உயரத்தில் இருப்பதால் அவற்றுள் பழங்காலத்தில் சித்திரக் குள்ளா்கள் வாழ்ந்தனா் என்று மக்கள் நம்புகின்றனா். பஞ்சபாண்டவா்கள் வனவாசத்தின்போது இங்கு வந்து தங்கினா் என்றும் நம்புகின்றனா். எனவே இந்த இடத்தை குள்ளா் வீடு, பஞ்சபாண்டவா் குகை என்றும் இப்பகுதியினா் அழைக்கின்றனா்.

ஜவ்வாதுமலையில் இதுபோன்ற கற்திட்டைகள், கீழ்ச்சேப்பிளியில் ஏராளமான உள்ளன. 4,000 ஆண்டுகள் கடந்தும் இந்த வரலாற்று எச்சங்களை மலைவாழ் மக்கள் பாதுகாத்து வருவது தமிழா் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com