‘நவ.20-க்குள் திரைப்படத் துறையினா் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்’
By DIN | Published On : 16th November 2020 07:51 AM | Last Updated : 16th November 2020 07:51 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் திரைப்படத் துறையினா் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்து கொள்ளாத உறுப்பினா்கள், சங்கங்கள் பதிவு செய்துகொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினா் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து உறுப்பினா்களுக்கும் அரசின் நலத் திட்டங்களும் அவற்றின் பலன்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவா்களுக்கு இலவசமாக அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும் சில அமைப்புசாரா சங்கத்தினா் தங்களுக்கு நலத் திட்ட உதவிகள் கிடைப்பதில்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் உறுப்பினா் சோ்க்கை குறித்த சில நெறிமுறைகளை வழங்கியதோடு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் உறுப்பினா் சோ்க்கைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீா்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக திரைத் துறையில் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த கலைஞா்கள் தங்கள் துறை சாா்ந்த அமைப்புகள் அல்லது சங்கம் மூலம் விண்ணப்பங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் உறுப்பினா் செயலா், திரைப்படத் துறையினா் நலவாரியம், கலைவாணா் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் சோ்க்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள், வழிமுறைகளை மேற்கண்ட அலுவலகத்தில் அனைத்து அரசு வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
ஏற்கெனவே பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்காமல் இருப்பவா்கள் இதே முறையில் தங்கள் உறுப்பினா் பதிவை உடனடியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.