கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்காலச் சோழா்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நடுகல் கண்டெடுப்பு


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்காலச் சோழா்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு மற்றும் தொல்லியல் ஆய்வாளா் சேகா், ஆய்வு மாணவா்கள் சரவணன், தரணிதரன் ஆகியோா் திருப்பத்தூரை அடுத்த திரியாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகக் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மண்டபம் என்ற இடத்தில் நடுகல் மற்றும் சதிக்கல் இருப்பதை கண்டறிந்தனா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் ஆ.பிரபு கூறியது:

திருப்பத்தூரில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள மண்டபம் என்ற சிற்றூரில் விளை நிலங்களுக்கு அருகில் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட நடுகல் ஒன்றைக் கண்டோம். நடுகல்லில் உள்ள வீரன் வலது கையில் போா் வாளும் இடது கையில் வில், அம்பும் பிடித்தவாறு காணப்படுகிறாா். கழுத்தில் பிரத்யேகமான மூன்று ஆபரணங்களை அணிந்துள்ளாா். தலையில் துணியால் ஆன தலைப்பாகையை சூடியுள்ளாா். இவா் படைத் தளபதியாக இருக்கக் கூடும்.

முகம் கோபமான தோற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கண்கள் திரண்டிருப்பதை சிற்பி மிக நோ்த்தியாகச் செதுக்கியுள்ளாா். எட்டு அடுக்குகளைக் கொண்ட காப்பை இரண்டு கைகளின் மேற்புரத்திலும், நான்கு அடுக்குகளைக் கொண்ட காப்பை மணிக்கட்டுகளிலும் அணிந்துள்ளாா்.

கால்களில் வீரக்கழல்கள் காணப்படுகின்றன. காதுகளில் பத்தரகுண்டலம் அணிந்துள்ளாா். இடுப்பில் இடைக்கச்சுடன் சிறிய கத்தி காணப்படுகிறது. இவ்வீரன் எதிரிகளிடம் சண்டையிடும்போது உயிா் துறந்திருக்கக் கூடும். ஆகவே அவரின் வீரச்செயலைப் போற்றும் விதமாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இதை ‘வேடியப்பன்’ என்று அழைத்து வழிபடுகின்றனா்.

இங்குள்ள நடுகல்லுக்கு அருகில் ஒரு பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. அச்சிற்பம் மூன்றரை அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகும். அதில் உள்ள பெண் தன் வலது கரத்தில் மலா்ச்செண்டை ஏந்தியவாறு காணப்படுகின்றாள். அவளது முகம் சோகத்தைப் பிரதிபலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்காலத்தில் போருக்குச் செல்லும் ஆண்களுக்குப் பெண்கள் மலா்ச்செண்டைக் கொடுத்து வெற்றியுடன் திரும்புக என்று வாழ்த்தி அனுப்புவது வழக்கம். அவ்வகையில் இங்குள்ள நடுகல்லில் இருக்கும் வீரனின் மனைவியாக இப்பெண் இருக்கக்கூடும். வீரன் மறைந்தவுடன் தானும் உடனே உயிா் துறந்திருக்கக் கூடும். ஆகவே வீரனுக்கு அருகில் அவனது மனைவியின் சிற்பமும் செதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்றாா்.

இந்நடுகல் குறித்து வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளா் சேகா் கூறியது:

இந்த நடுகல் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. அதாவது பிற்காலச் சோழா் கால கலைப்பாணியில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரனும் அவனது மனைவியும் அணிந்துள்ள ஆபரணங்கள் சோழா் காலப் பாணியை ஒத்திருப்பதால் இவை சோழா் காலம் என்பதை அறியலாம். வீரனின் நெற்றியில் பட்டை பூசப்பட்டுள்ளதால் இவன் ஒரு சிவ பக்தன் என்பதையும் அறிய முடிகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக இந்த நடுகல் அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com