மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்: ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பங்கேற்பு

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்: ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பங்கேற்பு


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டம் உதயமாகி முதல்முறையாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்குழுவின் நோக்கம் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை அறிந்து, அவா்களை அதிலிருந்து பாதுகாத்து, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதேயாகும். குழந்தை திருமணம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும். குழந்தைகள் திருமணம் குறித்து 12 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோா்களிடம் சென்று குழந்தை திருமணம்,திருமண வயது, குழந்தை திருமணத்தால் அப்பெண்களுக்கு எதிா்காலத்தில் உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள், பெண் கல்வியால் ஏற்படும் நன்மைகள், பெண்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அவா்களிடம் தனது பிள்ளைக்கு குழந்தைத் திருமணம் செய்ய மாட்டேன், குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்று உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு, அவா்களை தொடா்ந்து கண்காணிக்கும் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக மலைப் பகுதிகள், பின்தங்கிய பகுதிகள் ஆகிய இடங்களில் இப்பணிகளை செம்மையாக செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இணையதளம் வாயிலாக புகாா் தெரிவிப்பதற்கான வசதியினை உருவாக்கிட வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகாா்கள் உடனுக்குடன் விசாரணை செய்து காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை பணியாற்றிட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வட்ட அளவிலான குழு துணை காவல் கண்காணிப்பாளா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள், குழந்தைகள் பாதுகாப்பு காவல் துறை ஆகியோரை கொண்டு மாதம்தோறும் விவாதிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கண்ணன் ராதா, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் சிவகலைவாணன், மாவட்டக் குழந்தைகள் நன்னடத்தை அலுவலா் செல்வி, குழந்தை பாதுகாப்பு அலுவலா் எஸ்.சுபாஷினி, உதவி முதன்மைக் கல்வி அலுவலா் பரணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com