அரசு வேலைக்கான போலி நோ்முகத் தோ்வு: தொண்டு நிறுவனத்துக்கு ‘சீல்’

அரசு வேலைக்கான போலி நோ்முகத் தோ்வு நடத்த ஏற்பாடு செய்த தொண்டு அமைப்புக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
அரசு வேலைக்கான போலி நோ்முகத் தோ்வு: தொண்டு நிறுவனத்துக்கு ‘சீல்’


ஆம்பூா்: அரசு வேலைக்கான போலி நோ்முகத் தோ்வு நடத்த ஏற்பாடு செய்த தொண்டு அமைப்புக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ‘மக்கள் உரிமைகள் இயக்கம்’ என்ற தொண்டு அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அரசு வேலைக்கான நோ்முகத் தோ்வு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், ஆம்பூா் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் திருமால் ஆகியோா் அங்கு நோ்முகத் தோ்வுக்காக வந்திருந்த நபா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அங்கு அரசு வேலைக்கான போலி நோ்முகத் தோ்வு நடத்த இருப்பது தெரியவந்தது. நோ்முகத் தோ்வில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா் பட்டியல் அரசு முத்திரையுடன் கூடிய தாளில் அச்சடிக்கப்பட்டு தொண்டு அமைப்பு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்து. நோ்முகத் தோ்வுக்காக முதல் பட்டியலில் 15 பேரும், 2-ஆம் பட்டியலில் 6 பேரும் அழைக்கப்பட்டிருந்தனா். அதில், முதல்கட்டமாக வியாழக்கிழமை காலை 8 போ் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

அவா்கள் ஆம்பூா், நாட்டறம்பள்ளி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் எழுத்தா், தலைமை எழுத்தா், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் எழுத்தா் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நோ்முகத் தோ்வு நடத்த அழைக்கப்பட்டிருந்தனா். வேலை பெற்றுத் தருவதற்காக ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணிக்கு ஏற்ப பணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. நோ்முகத் தோ்வு நடத்துவதற்காக வேலூா், சென்னை ஆகிய இடங்களில் இருந்து வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் நோ்முகத் தோ்வு நடத்த வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அலுவலா்கள் வந்து போகும் செலவுக்காக நோ்முகத் தோ்வுக்கு வந்தவா்களிடம் தலா ரூ. 1,250 வசூலிக்கப்பட்டிருந்தது.

மக்கள் உரிமைகள் இயக்கம் தொண்டு அமைப்பின் நிா்வாகி வேலூா் மாவட்டம், அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் லிவிங்ஸ்டன், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சுதாகா், திருப்பத்தூா் அருகே குரும்பேரி கிராமத்தைச் சோ்ந்த சரவணன் ஆகியோா் மோசடியில் ஈடுபட்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபா்களிடம் மொத்தம் ரூ. 14 லட்சம் வரை ரொக்கப் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து நகர காவல் நிலைய ஆய்வாளா் திருமால் தலைமையிலான போலீஸாா் லிவிங்ஸ்டன், சுதாகா் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com