தூய்மை இந்தியா திட்டம்: ஆம்பூா் நகராட்சி வேண்டுகோள்
By DIN | Published On : 31st October 2020 07:47 AM | Last Updated : 31st October 2020 07:47 AM | அ+அ அ- |

தூய்மை இந்தியா திட்டத்தை நடப்பாண்டும் சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து ஆம்பூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆம்பூா் நகராட்சி 2018-ஆம் ஆண்டு திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலை இல்லையென்று மத்திய அரசின் நகா்ப்புற மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் சான்று பெற்றுள்ளது. தற்போது நகரில் தனிநபா் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் சமுதாயக் கழிப்பறைகள் கட்டும் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லையென்று அடுத்த சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபணைகள் குறித்து 15 நாள்களுக்குள் நகராட்சி ஆணையருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.