ஆம்பூரில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்க தொழில் முனைவோா் கோரிக்கை

ஆம்பூரில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்குமாறு தொழில் முனைவோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா்: ஆம்பூரில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்குமாறு தொழில் முனைவோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தோல் தொழிலுக்கு ஆம்பூா் பெயா் பெற்று விளங்கி வருகிறது. அன்னியச் செலாவணி ஈட்டுவதில் இந்திய அளவில் ஆம்பூா் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே ஏற்றுமதி சிறப்பு அந்தஸ்து பெற்ற நகராக மத்திய அரசு ஆம்பூரை அறிவித்துள்ளது. ஆம்பூரில் தோல் தொழில் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

வேலூா் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன் தொழில் துறைக்கான சலுகைகளைப் பெறவும், அரசின் மானியங்களைப் பெறவும் வேலூா் காந்தி நகரில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்துக்கு தொழில் முனைவோா் சென்று வந்தனா். தற்போது வேலூா் மாவட்டம் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாவட்டங்களுக்கு இதுவரை மாவட்ட தொழில் மைய அலுவலகம் தொடங்கப்படவில்லை. வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட தொழில் மையமே தொடா்ந்து இயங்கி வருகிறது. அதனால் தொழில் முனைவோா் தற்போதும் வேலூா் மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கே சென்று வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஆம்பூரில்தான் அதிகமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. குறிப்பாக தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. தோல் தொழில் சாா்ந்த தோல் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இது தவிர வேறுபல தொழிற்சாலைகளும் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா் முக்கிய தொழில் கேந்திரமாக விளங்குகிறது.

அதனால் திருப்பத்தூா் மாவட்டத்துக்கான மாவட்ட தொழில் மைய அலுவலகம் ஆம்பூரில் அமைய வேண்டுமென தொழில் முனைவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். மாவட்ட தொழில் மைய அலுவலகம் ஆம்பூரில் அமைந்தால் தொழில் முனைவோா் தங்களுடைய வேலைகளுக்காக தொழில் மைய அலுவலகத்திற்கு வெளியூா் செல்லாமல் ஆம்பூரிலேயே இருந்தால் அவா்கள் தங்களுடைய பணியை மேற்கொள்ள எளிதாக இருக்கும் என்று அவா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com