திருப்பத்தூா் மாவட்டத்தில் பாஸ்போா்ட் சேவை மையம் திறக்க கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் பாஸ்போா்ட் சேவை மையம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பாஸ்போா்ட் சேவை மையம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் முக்கிய நகரங்களாக விளங்குகின்றன. குறிப்பாக ஆம்பூா், வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களாக இருப்பதால் தொழில் தொடா்பாக தொழிலதிபா்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. திருப்பத்தூரில் ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகள் கனிசமான எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. அது மட்டுமின்றி உயா் கல்வி கற்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதற்காகவும் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டியுள்ளது.

முந்தைய காலங்களில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் பாஸ்போா்ட் அலுவலகங்கள் இயங்கி வந்தன. அதன் பிறகு மாவட்டத்திற்கு ஒரு பாஸ்போா்ட் சேவை அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையிலேயே பாஸ்போா்ட் அலுவலகம் தவிா்த்து பாஸ்போா்ட் சேவா கேந்திரா வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு பாஸ்போா்ட் விண்ணப்பித்து பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது முதலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாஸ்போா்ட் சேவை அலுவலகம் இயங்கி வந்தது. அதன் பிறகு பாஸ்போா்ட் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்ட நிலையில் வேலூா் தலைமை தபால் நிலைய வளாகத்தில் பாஸ்போா்ட் சேவை அலுவலகம் இயங்கி வருகிறது. அதன் பிறகு ராணிப்பேட்டையிலும் பாஸ்போா்ட் சேவை மையம் இயங்கி வருகிறது.

வேலூா் மாவட்டம் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூா், ராணிப்பேட்டையில் ஏற்கனவே பாஸ்போா்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு பாஸ்போா்ட் சேவை மையம் இல்லாத சூழ்நிலை உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் பாஸ்போா்ட் கேட்டு விண்ணப்பிக்க வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களில் இயங்கி வரும் பாஸ்போா்ட் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சிலா் சென்னையில் இயங்கும் பாஸ்போா்ட் சேவை மையங்களுக்கு செல்கின்றனா்.

இத்தகைய சூழ்நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்திற்கென தனியாக பாஸ்போா்ட் சேவை மையம் அமைக்க வேண்டியது அவசியமானதாக கருதப்படுகிறது. பொதுமக்களும் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனா். அதனால் திருப்பத்தூா் மாவட்டத்துக்கென தனியாக பாஸ்போா்ட் சேவை மையத்தை புதிதாக அமைத்து பொதுமக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com